பக்கம் எண் :

1002தணிகைப் புராணம்

(இ - ள்.) பொன்போன்றவளே, மணிபோன்றவளே, காட்டின் கண்ணுள்ள கிளிமொழியன்ன மொழிகளையுடையாளே மேகத்திடத்தினின்று நீங்கிய மின்னற்கொடி போன்றவளே, விளக்கொளி போல்வாளே, வாசனையுடன்கூடிய பொலிவுபெற்ற கொழுந்து போல்வாளே (யான் திருத்தியமைத்ததை யறிந்து) வீணே ஐயங்கொண்டு நாணமுறாதே கொள். விளங்குகின்ற நின்கோலம் யாவையும் நின்னையே ஒத்தவளாகிய உயிர்ப்பாங்கியின் அணியென்று (கண்டார் யாவரும் சொல்லும் வண்ணம்) யாம் செய்தன மென்றானென்க.

(வி - ம்.) கொன் - வீண். கோலம் - அழகு. நின்னே யனையவள் என்றது தோழியை. மெய்ப்பாடு : உவகை. பயன் : தெளிவித்தல்.

(187)

பாங்கியொடு வருகெனப் பணித்தல்

அஃதாவது தலைவி நாணுதலையறிந்து உளந்தெளிவித்த தலைவன் தலைவியை இனிக் குறியிடத்து நீ வருங்கால் நின் உயிர்த்தோழியுடனன்றி வாராதே கொள்ளெனக் கூறாநிற்றல்.

 நயந்தெனக் கார வருளினை யாயினங் காய்முழவ
 வியந்தனக் கேற்பநின் றேங்கு மருவியிம் மால்வரைவாய்
 வயந்தனக் கேற்றவை வாள்விழி நின்னுயிர் மாதொடன்றிப்
 பயந்தனக் கேற்ற படர்தலை யாதும் படரலையே.

(இ - ள்.) நங்கையே விரும்பி எனக்கு நிறையருள் செய்யக் கருதினையாயின் முழவமாகிய வாச்சியத்தினுக்குப் பொருந்த நிலைபெற்று அருவியொலிக்கு மிப்பெரிய வரையினிடத்து (கண்டாரை) வெற்றி கோடற்குத் தகுதியாகப் பொருந்திய கூரிய வாள்போன்ற விழியினை யுடைய (நின்னுயிர்ப் பாங்கியாகிய) மாதினோடல்லாமல் தன்னாற் பிறர்க்குப் பயன்பொருந்தற் கேதுவாகிய செலவை நீ சிறிதும் நினையாதே கொள் என்றானென்க.

(வி - ம்.) நயம் - இன்பம். ஆர - நிறைய. முழவவியம் - மத்தள வாத்தியம். மால் - பெரிய. வயம் - வெற்றி. உயிர்மாது - உயிர் போன்ற தோழி. தனக்கு : வேற்றுமை மயக்கம். முன்னைய படர்தல் செலவு. பின்னையது நினைவு. இதனைப் படர் நினைந்திரங்கல் என்னும் தொல். சொல். உரி. சூத்திரத்தானறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வற்புறுத்தல்.

(188)

வேறு

பாங்கியிற் கூட்டம்

அஃதாவது பாங்கனைக்கூடிய கூட்டுறவின்கண் தன்னுள்ளக் கருத்து முற்றுப்பெற்ற தலைவன் தெருண்டுவரைதலைத்தெருளானாயின் அவள் கண் காட்டப்பெற்ற காதற்றோழியை வழிபட்டுச் சென்று தெற்றெனத் தன்குறை கூறாது இரத்தல் செய்து கரந்தமொழியாற் றன் கருத்து அறிவித்தல்.