பக்கம் எண் :

களவுப் படலம்1007

வன்றிவினாதல்

அஃதாவது வேழமுங் கலையும் நுங்கள் தனங்களையும் கண்களையும் ஒத்துள்ளன. இவற்றை இவன் ஊறுசெய்தன னெனக்கருதி வாய்திறவாது நிற்க யான்கணை தொட்ட பன்றி நுங்கள் உறுப்புக்களின் அடையாளமுடைய தொன்றன்று. ஆதலான் வாய்திறந்து கூறுவீரெனக் கூறா நிற்றல்.

 வருமுலைக் கோட்டது மாழையங் கண்ணிகர் கண்ணதென்றோ
 உருமுலை யோதை யுவாவுங் கலையு முரைத்தல்செல்லாய்
 பொருமுலை வாய்வடி வேல்படு வன்றி புகுந்ததுண்டோ
 குருமுலை வீபுனை கோதா யிதுவோர் குறியதன்றே.

(இ - ள்.) வளருகின்ற (நுங்கள் தனங்கள் போன்ற) கொம்பினை யுடையது என்றும், மாவடியினையொத்த அழகிய (நுங்கள்) கண்ணினை யொத்த கண்களையுடையதென்று மல்லவா இடியும் வருந்தத்தக்க ஓசையையுடைய யானை வந்ததனையும் மான்வந்ததனையும் உரைத்தல் செய்யாய், கொல்ல னுலைக்களத்தில் வடித்தல் செய்து பொருந்திய வேற்படை பட்டுருவிய பன்றியானது வந்ததுண்டா. நிறம் பொருந்திய தனத்தினையும் பூக்களணிந்த கூந்தலினையு முடையாளே இப்பன்றி (நுங்களுறுப்புக்களின்) ஓர் அடையாள முடையதல்லவே கூறுவாயாக வென்றான்.

(வி - ம்.) உரும் - இடி. உலை - வருத்தம். உவா - யானை. உலை - கொல்லனுலைக்களம். வடி - கூர்மை. வன்றி - பன்றி. குரு - நிறம். வீ - பூ. குறி - அறிகுறி : அடையாளம். மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல்

(197)

வேங்கை வினாதல்

அஃதாவது வன்றிவினாவ வாளாவிருக்கக்கண்ட தலைமகன் தளிர் போன்ற மேனியுடையாய் யானெய்தவன்றி செல்லிடங்கூறின் அவ்வன்றியின் கோட்டினை இறைவன் மார்பிற் கணியாக்குவேன். கூறுகின்றிலீர். யானொரு வேங்கையினையும் எய்தேன். அது செல்லிடங்கூறின் அதன் உரியை இறைவற்குடை யாக்குவேனெனக் கூறாநிற்றல்.

 கருமா னுரைத்திடின் வீராட்ட காசங்கைக் கொண்டருளும்
 பெருமான் மருமத் தணிபடுப் பேனிற்க பேழ்கயவாய்
 இருமா நிலமஞ்சும் வேங்கையெய் தேனெய் துழிபகர்ந்தால்
 குருமாந் தளிர்நிறத் தாயுடை யாங்குழ கற்கதுவே.

(இ - ள்.) நிறமமைந்த மாந்தளிர் போன்ற நிறத்தினையுடையவளே ! வன்றி சென்ற விடத்தைக் கூறினால் வீராட்டகாசமென்னுந் தலத்தினைக் கொண்டருளிய பெருமையையுடைய இறைவன் மார்பில் (அதன் கோட்டினை) அணியாக அணிவேன். (இடங் கூறுகின்றிலீர். கூறீராயினும்) அதுகிடக்க, பிளவுபட்ட பெரிய வாயோடுகூடிய பெரிய மாநிலத்திலுள்ளார் அஞ்சத்தக்க வேங்கைப்புலியை எய்தேன். (அவ்