பக்கம் எண் :

களவுப் படலம்1009

(இ - ள்.) நும்மாட்டு நிறைந்த அருட்குணங்கட்கு (யான் வினாவிய வினா) பொருந்திய தொன்றன்றென்றோ (கெட்டழிந்த பொருளைப்பற்றி) கூறுகின்றாயல்லை. மேலாகிய இருளினைப்போலப் பொருந்திய கூந்தலையுடையவளே. இடுகிய இடையானது இளைத்து நீங்க மயக்கமுளவாதற்குப் பொருந்த அழகிய தனங்கள் ஒவ்வொருநாளும் வளர்கின்றதனை (உங்கள்) தெளிவுக்குப் பொருந்தத் தெளிவிக்காதிருப்பது என்ன காரணம் சொல்வீரென்றான்.

(வி - ம்.) கெடுதி - கெட்டொழிந்த பொருள். மேற்று - மேலது. இடுகிடை - சுருங்கியவிடை. மருள் - மயக்கம். தெருள் - தெளிவு. மெய்ப்பாடு : இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல்.

(200)

கண்ணிபூங்குழற் கொண்ணுமோ வென்றல்

அஃதாவது நீர் வாய் திறவாமைக்குக் காரணமென்னென யானறிந் திலேன். அது கிடக்க இக்கண்ணி நுங்குழற்குத் தகுமாயின் அணிவீராமெனத் தழைகாட்டி நின்று தன்னெண்ண மறிவியாநிற்றல்.

 அறியு மறிவுக் கறிவாகி நின்ற வமலனறி
 குறியு நெறியுங் கடந்த குமாரலிங் கேசனும்வீழ்
 முறியு நறுமலர்க் கண்ணியு மொய்குழற் காகுங்கொல்லோ
 மறியு மறிய மறியு மதரரி வாட்கண்ணியே.

(இ - ள்.) (உவமைப் பொருளாந்தன்மை நமக்கிலவென) மான்களும் மடங்கியோடா நிற்க. (காதளவோடி) மடங்குகின்ற ஒளி பொருந்திய மதர்த்த அரிபரந்த கண்ணையுடையவளே. (காட்சி முதலிய அளவைகளான் எல்லாப் பொருள்களையும்) அறிதல் செய்கின்ற உண்மையறிவினுக்கும் (அறிவிக்கும்) அறிவு வடிவாய் நிலைபெற்ற மலமற்றவனும் (அறிதற்குரிய) அடையாளங்களும் அவ்வழிகளுங் கடந்தப்பாற் சென்ற குமாரலிங்கேசனும் ஆகிய இறைவனும் விழைகின்ற தளிரும் நல்ல மலர்களாலாகிய கண்ணியும் நுங்கள் செறிந்த கூந்தலின் கண் அழகு செய்தற்காமோ கூறுவீரென்றா னென்க.

(வி - ம்.) குறி - அறிகுறி : அடையாளம். வீழ் - விரும்பல். முறி - தளிர். மறி முன்னதுமான் பின்னவை தொழிலுணர்த்தி நின்றன. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல்.

(201)

மொழியாமை வினாதல்

அஃதாவது பல வினாக்கள் வினாவியும் வாய்திறவாமை யறிந்து பெறுதற்கரிய அமிழ்தம் முதலியவற்றை விரும்பினும் உயர்ந்தோர் விருந்தினர் மாட்டில்லையெனக் கூறார். யான் பல கடாக்கள் விடுப்பினும் நீவிர் ஒரு விடையேனும் கொடாமைக் காரணமென்னோவெனக் கூறாநிற்றல்.

 மருந்தினை வான நிதியினை வேட்பினு மாட்டுளதேல்
 விருந்தினர் மாட்டின்மை மேவச்செய் யார்விரி நீருலகோர்