பக்கம் எண் :

1010தணிகைப் புராணம்

 பொருந்திய பல்லக டாவுய்த்து வேண்டினும் பூங்கொடியே
 திருந்திய வோர்விடை யேனுங்கொ டாத திறமெவனே.

(இ - ள்.) பூங்கொடி போல்வாளே, விரிந்த கடலாற் சூழப் பெற்ற உலகின்கண்ணுள்ள உயர்ந்தோர் வானத்துள்ள (இறப்பை நீக்கும்) அமிழ்தும், சங்கம் பதுமம் முதலிய நிதிகளும் தம் மாட்டுளவா மாயின் புதியரண்மி யிரப்பின் அவர் பக்கல் அவை இல்லாமை பொருந்த (இல்லையெனக்) கூறார். யான் பல்லவாகப் பொருந்திய கடாக்களைச் செலுத்தி விழையினும் (நீங்கள்) யான் திருந்த ஒரு விடை யாயினும் ஈயாதவகை என்ன காரணமோ யானறியே னென்க.

(வி - ம்.) மருந்து - அமிழ்தம். வானநிதி - வானுலகத்திலுள்ள சங்கநிதி, பதுமநிதி, விருந்தினர். உலகோர் - உயர்ந்தோர். கடா - வினா. திருந்திய - திருந்த. விடை - மறுமொழி. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல்.          

(202)

பாங்கி தலைவனை யயிர்த்தல்

அஃதாவது தலைமகன் கண்ணிகொண்டு நின்று கரந்த மொழியாற்றன் கருத்தறிவிக்கத் தோழி இவர் பல கடாவும் விடையும் பித்தினர் போலவும், கலைவித்தினர் போலவும் விடுத்தனர். தன் சொற்கொத்த வில்லினையுடையாருமல்லர். இப்பூங் கொத்தினை உடையார் யாரோ வறிகிலம். அண்மைக்கணுளராங் குறிப்பினையுடையருமாகக் காணப்படு கின்றனர் : என ஐயுற்றுக் கூறாநிற்றல்.

 பித்தினர் போலப் பலதொடுத் தார்பிறங் கெக்கலைக்கும்
 வித்தினர் போல விடையும் விடுத்தனர் மெய்ம்மையுளம்
 பொத்தினர் போல வுரைக்கொத்த வில்லின ரல்லர்பொற்பூங்
 கொத்தினர் யாவர்கொல் சேயரு மல்லாக் குறிப்பினரே.

(இ - ள்.) பித்தினையுடையார்போல (முன்னொடு பின்மாற்றமுள) (கடாக்களை) ஒன்றன்பின்னொன்றாகத் தொகை செய்து கூறினார். விளக்கமுறுகின்ற கலைகள் யாவற்றினுக்கும் விதையாயுள்ளவர்போல (அவரே) விடையுங்கூறினார். மெய்ம்மையான் மூடப்பெற்ற (உண்மையான) உள்ளமுடையார் போன்று (தாங்) கூறும் சொல்லினுக் கொத்துள்ளவாகிய விற்படையை யுடையாருமல்லர். அழகிய பூங்கொத்தினை யுடையவர் யாவரோ. அண்மைக்கணுளவாம் குறிப்பினையுடையருமாகக் காணப்படுகின்றனர்.

(வி - ம்.) பொத்தல் - மூடல். மெய்ப்பாடு : மருட்கை. பயன் : ஐயந்தீர்த்தல். இத்திருப்பாட்டினையும் அடுத்த திருப்பாட்டினையும் ஒரு சாரார் இருவருமுள்வழி யவன்வர வுணர்தலென்பர்.

(203)

பாங்கி தலைவனைத் தெளிதல்

அஃதாவது இவன் யாவனோ வென்றயிராநின்ற தோழி பேராராய்ச் சியளாதலின் அவன் கூறாநின்றவை நாடுதல் செயாதுஊர், நெறி, பெயர்களிற் பொருந்தி இவன் வேட்டையாடிய யாவும் இவளைத் தெருட்டி இவள் கூந்தலிற் கண்ணி சூட்டுதல் எனத் தெளியாநிற்றல்.