பக்கம் எண் :

1012தணிகைப் புராணம்

தோழி தலைவியைத் தோற்றத்தி னயிர்த்தல்

அஃதாவது நீண்டும் பிறழ்ந்தும் பிள்ளைப்பருவத்து வெள்ளை நோக்கின்றி உள்ளொன்று கொள்ள நோக்கும் கண்ணும், தந்நிலை திரிந்து வேறுபடுந் தோளும், தனங்களும் பருத்துக் காட்டுதலான் ஐயுறுதல்.

 வளைவளர் கையன் விழிவளர் பாற்கடல் வார்துவரின்
 கிளைவளர் காட்சிய சேயரிக் கண்கிளர் வேய்பொரு தோள்
 உளைவளர் சொல்லிக்கு வீங்கிற் றிடையுமுண் டில்லையெனத்
 தளைவளர் கொங்கைக் கினியிட மின்று தடவுரமே.

(இ - ள்.) பாஞ்சசன்னிய மென்னுஞ் சங்கந்தங்குகின்ற கையையுடைய விண்டு அறிதுயில் செய்கின்ற பாற்கடலினுளவாகிய நீண்ட பவளத்தின் கூட்டங்கள் செந்நிறத்தோடு வளர்கின்ற காட்சியை யுடையன. சிவந்த அரிபரந்த கண்கள் உளையென்னும் பண்ணின் இனிமை தங்கும் சொல்லினை யுடையாளுக்கு மூங்கிலினை யொத்த தோள்கள் பருத்தன. இடை உளது இலதென்று கண்டார் கூறப் பெரிய மார்பின் கண் (கச்சான்) தளையப்பட்ட தனங்களுக்கு இனி இடமின்றென்று சொல்லும்படி பருத்தன வென்க.

(வி - ம்.) வளை - சங்கு. விழிவளர்தல் - அறிதுயில் கோடல். காட்சிய - தோற்றத்தையுடைய. கண்கள் பவளம்போற் சிவந்த தோற்றத்தையுடையன வென்க. உளை - பண். தளை - கட்டு. மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு நாடல்.

(206)

ஒண்டொடிப் பாங்கி யொழுக்கத்தி னயிர்த்தல்

அஃதாவது பண்ணையாயத்தோடு முற்றிலான் மணற்கொழித்துச் சோறமைத்தல் முனிந்த குறிப்பினளாய்ப் பெண் டன்மைக் கேற்ப வொழுகுதல் கண்டு ஐயுறாநிற்றல்.

 தண்டலை வாய்த்தர ளங்கொடு சிற்றி றனையிழைத்து
 வண்டலி னாட்டயர் வீழாண் மணிக்கழங் கம்மனையும்
 கொண்டணை யாள்குரு மாமணி யூசலிற் கோளுமில்லாள்
 பண்டணை யாத வொழுக்கின ளின்றிப் பசுங்கிளியே.

(இ - ள்.) இப்பசிய கிளிமொழியன்ன வசனங்களையுடையாள் சோலையின்கண் முத்துக்களைக்கொண்டு சிறுவீட்டினையமைத்து வண்ட லாட்டயர்தலை விரும்பிலள். அழகிய கழற்காயும் அம்மனையுங்கொடு ஆடல் செய்யாள். நிறம் பொருந்திய மணிகளழுத்திய ஊசலில் (ஏறி ஆடுதலிற்) கொள்கையிலளு மாயினள். இன்றுமுன் கண்டறியாத வொழுக்கினளா யுளளென் றையுறாநின்றாளென்க.

(வி - ம்.) தண்டலை - சோலை. வண்டல் - மகளிர் விளையாட்டு. வீழ்தல் - விரும்பல், குரு - நிறம். மெய்ப்பாடு - நகை. பயன் : கரவு நாடல்.

(207)