| ஒள்ளிழைப் பாங்கி யுண்டியி னயிர்த்தல் அஃதாவது பண்டு பொன் முதலிய கொண்டு ஒறுத்தூட்ட உண்டு வருகின்றவள் இஞ்ஞான்று ஆசாரமும் நாணும் காதலும் மீதூர அதன் மேல் உவப்பும் ஆர்வமும் இன்றி மிகவொறுத்த உள்ளத்தளாதல் கண்டையங் கோடல். | | தீம்பான் மிதக்குஞ் செழுஞ்செந்நெல் வல்சியுஞ் செங்கரும்பின் | | | ஆம்பா கடுத்தசிற் றுண்டியு நோலையு மல்லனவும் | | | ஓம்பா வினிதெடுத் தூட்ட வுவந்துண்ட வட்கவைதாம் | | | வேம்பா யிருந்தன போலும் விழையா விளைவினவே. |
(இ - ள்.) தீவிய பாலின் கண்ணே மிதத்தல் செய்யும் செழித்த செந்நெல்லாலாகிய சோறும் செவ்விய கரும்பினின்றும் உளவாகின்ற வெல்லப்பாகு பொருந்திய சிற்றுணாக்களும் எட்கசிவும் இவையல்லனவாகிய உணவுப் பொருள் பிறவற்றையும் (தாயர்கள்) பாதுகாவல் செய்து இனிதாக எடுத்தல் செய்து உண்பிக்க உவப்பெய்தி உணவாகக் கொண்ட அவளுக்கு அப்பொருள்கள் வேம்புபோல் (வெறுப்பாய்) இருந்தன போலும். அல்லது (அப்பொருள்கள்) தாம் அவள் விரும்பாமைக் கேதுவாகிய முதிர்ச்சியை யுடையனவா யிருந்தனவோ அறிகிலேம் என்றாள் என்க. (வி - ம்.) வல்சி - சோறு. நோலை - எட்கசிவு. ஓம்பா - ஓம்பி. போலும் : ஒப்பில் போலி. விளைவு : முதிர்ச்சி. மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு நாடல். (208) செய்வினை மறைப்பிற் றேமொழி யயிர்த்தல் அஃதாவது முன்னர்ப்போலாது இக்காலத்து நினைவுஞ் செயலும் தலைவனோடு பட்டனவேயாகலான் அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தலைக் கண்டு ஐயங் கோடல். | | திரையகஞ்சேர்கடன் மெல்லென் பொருள்செறி வுற்றவெல்லாங் | | | கரையகஞ் சேர்ப்பது போல்வெளி கண்ட கரைவதன்றி | | | வரையகஞ் சேர வொளித்திடு மத்தகு மாகடல்போல் | | | விரையகஞ் சேர்குழ றன்னகம் விள்ளா விரகினளே. |
(இ - ள்.) அலைகள் தன்னிடத்தே சேரப்பெற்ற கடல் மென்மைத் தன்மையை யுடையன வென்று சொல்லத்தக்க பொருள்கள் தம்பாற் பொருந்தினவற்றை யெல்லாம் (அவட்டங்கவிடாது) கரையின்மாட்டுச் சேர்த்தல்போல வெளியவாகத்தான் அறிந்த எண்பொருள்களைப் பற்றி நம்மிடம் சொல்லாடுதலின்றி மலையைத் தன்னகத்திடத்தே பொருந்த வொளிக்கின்ற தன்மையுடைய பெரிய அக் கடலைப்போன்று நறுமணத்தைத் தன்னகத்தே கொண்ட கூந்தலினையுடையாள் தன்னகத்துள்ள அரும்பொருளை எமக்கு வெளிப்படக் கூறாத சூழ்ச்சியினை யுடையாளோ ? என்க. |