| (வி - ம்.) மெல்லென் பொருள் - மென்மைப் பொருள். வெளி கண்ட - யாவரும் தெற்றெனத் தெரிந்துகொண்ட எண்பொருள். அகம் : ஆகுபெயர். விரகு - சூழ்ச்சி : மெய்ப்பாடு - நகை. பயன் : கரவு நாடல். (209) இலவிதழ்ப் பாங்கி செலவி னயிர்த்தல் அஃதாவது பண்டுபோல் வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓரிடத்துச் சேறலில் ஐயுறுதலாம் .| | வெள்ளிடை யேமுகஞ் செய்தெழு வெள்ளம் விழையமலர்க் | | | கள்ளிடை வீழும் பொழில்படர் வாண்முன்பு காழ்சிறைக்கான் | | | நள்ளிடை யேயெழு சின்னீர் விழைய நடந்தொருசார் | | | தள்ளிடை நோமென் றிரங்குநள் போலத் தவிர்கிற்குமே. |
(இ - ள்.) முன்னரெல்லாம் பரந்த வெளியிடத்துப் (போதலைப்) பார்த்து எழுகின்ற நீரோட்டத்தினை யொப்பப் பூக்களினின்றும் தேன் இடையே விழுகின்ற சோலையினிடத்துச் செல்வாள் இப்பொழுதோ, வயிரமேறிய காவலினைக் கொண்ட காட்டின் நடுவிடத்தே ஓடல் செய்கின்ற சின்னீரையொப்ப நடத்தல் செய்து ஒரு பக்கத்துத் தடுமாறுகின்ற இடை வருந்தும் என்று இரக்கமுற்றவளைப் போலத் தங்கி நிற்கின்றாள். இதற்குக் காரணம் யாதோ என்க. (வி - ம்.) வெள்ளிடை - வெளி. முகஞ்செயல் - போதல். காழ் - வயிரம். சிறை - காவல். காவலையுடைய காட்டினிடை சின்னீர் விரைந்து செல்லாது தடைப்பட்டுத் தங்கி மெல்லச் சேறல்போலத் தலைவனைக் கூடப் பலப்பல எண்ணங் கோடலால் செலவு தடைப்பட்டு மெல்லச் சேறலியல்பாகலின் "காழ்சிறைக் கானள்ளிடையே யெழுசின்னீர் விழைய நடந்"தென்றார். தள்ளல் - தடுமாறல். தவிர்தல் - தங்குதல். மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு நாடல். (210) பல்வளைத் தோழி பயில்வி னயிர்த்தல் அஃதாவது செவிலி முலையிடத்துத் துயில்வேண்டாது பெயர்த்து வேறோரிடத்துப் பயிறலால் ஐயங் கோடல். | | மோட்டிளங் கொங்கை முருகுயிர் பூங்குழன் முத்தநகை | | | வாட்டிறம் வாட்டிய வாட்டடங் கண்ணிவள் வைகலுந்தாய் | | | தீட்டிய பூண்முலைத் தொய்யிலின் மார்புறச் சேர்ந்துதுயில் | | | காட்டிய கண்ணுக்குக் காட்டிலள் வேறுகண் ணுற்றசைந்தே. |
(இ - ள்.) பருத்த முற்றாத தனங்களையும், நறுமணத்தை வெளியிடும் பூக்களை முடித்த கூந்தலினையும் முத்தங்கள் போன்ற பல்லினையும் வாட்படையின் றன்மையை வருத்திய ஒளியுள்ள பெரிய கண்ணையுமுடைய இவள் நாடோறுந் தாய் எழுதிய அணிகலன் சார்ந்த தனங்களிடத்துள்ள சந்தனக் கோலத்தினையுடைய மார்பு பொருந்தச் சேர்ந்து துயிலினைக் கொண்ட கண்களுக்கு வேறிடத்துத் துயில்கொண்டு தங்கித் துயிலைக் காட்டிலள். இதற்குக் காரணம் உளதென்க. |