| (வி - ம்.) மோடு - பருத்த. வாட்டிய - வருத்திய. வாள் - ஒளி. தடம் - பெருமை. வைகலும் - நாடோறும். வேறு - வேறிடம். கண்ணுறல் - துயிறல். அசைதல் - தங்கல். கண்ணுக்குத் துயில்காட்டில ளென்க. மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு நாடல். (211) எதிர்ப்படு புணர்ச்சி யீர்ங்குழ லுணர்தல் அஃதாவது பயில்வி னயிர்த்த தோழி எதிர்ப்படுகின்ற புணர்ச்சியை அறிதல். | | கருவயிற் றாதலுங் காமரு சாயல் கழிந்துபசப் | | | புருவயிற் றாத லுறழத் தலைவரொண் டோள்புணர | | | மருவயிற் றாகும் பொழிலாடன் மற்று மறந்துபெண்மைத் | | | திருவயிற் றாவதன் றோமட வார்தந் திருவுருவே. |
(இ - ள்.) கருவானது வயிற்றினிடத்துப் பொருந்திய வளவில் கண்டார்க்கு விருப்பம் வரத்தக்க மென்மைத் தன்மை நீங்கிப் பசலையானது உருவினிடத்துப் பொருந்துதலை யொப்பத் தலைவரானவர் ஒள்ளிய தோளினைப்புணர நறுமணத்தைத் தன்னிடத்துடையவாகிய பொழிலின் விளையாடுதன் முதலிய பிறதொழில்களை மறத்தல்செய்து இளமையினையுடைய பெண்கள் அழகோடு கூடிய பெண்டன்மையாகிய செல்வத்தின்கண் டங்குவதல்லவா வென்றாளென்க. (வி - ம்.) கரு - கருப்பம். சாயல் - மென்மை. உரு - வடிவம். மரு - மணம். மற்று - ஏனைய ஆடல்கள். பெண்மைத்திரு - பெண்டன்மையாகிய செல்வம். (212) இருவரு முள்வழி யேந்தல் வினாதல் அஃதாவது எதிர்ப்படு புணர்ச்சியைத் தோழியறிந்த பின்னர்த் தலைவன் இவ்விருவரும் ஒருங்குற்று நின்ற செவ்வி நோக்கித் தலைமகன் என்னுள்ளந்தனியாக இவண் வந்தது கண்டீராயிற் கூறுமி னெனக் கூறாநிற்றல். | | வள்ளந் தணித்து மதர்த்துப் புடைத்த வனமுலையீர் | | | கள்ளந் தணித்தருள் வீராட்ட காசத்தெம் மான்கடவுள் | | | வெள்ளந் தணித்த விரிசடை யானை விரவலர்போ | | | லுள்ளந் தணித்திங்குப் போந்தது காணி னுரைமின்களே. |
(இ - ள்.) கிண்ணத்தை வடிவாற் கீழாக்கி மதர்த்தல்செய்து பருத்த அழகிய தனத்தையுடைய பெண்களே (ஆன்மாக்களின்) கள்ளத் தன்மையைத் தணியச்செய்து பின்னர்த் திருவருள் செய்கின்ற வீராட்டகாசமென்னும் திருக்கோவிலி லெழுந்தருளி இருக்கின்ற எமது தலைவன் தெய்வத்தன்மை பொருந்தக் கங்கைநீரின் விரைவினைத் தணியச்செய்த விரிந்த சடையை யுடையவனை அத்துவிதமாகக் கலத்தல் செய்யாத மக்களைப்போல எனது மனந்தனியாக இவண் வந்ததனைக் கண்டீராயின் உரையுங்கள் என்றா னென்க. |