| (வி - ம்.) வள்ளம் - கிண்ணம். கடவுள்வெள்ளம் - கங்கைநதி. உள்ளம் தணித்து - மனமானது என்னை நீக்கி. மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல். (213) தாழ்குழற் பாங்கி தலைவன் குறிப்பறிதல் அஃதாவது இருவருமுள்வழித் தலைவன்வினாய பின்னர்த் தோழி இவன் உள்ளம் இங்கு வந்ததனைக் கருதின் அது நிதம்பமாகிய கடலின் மூழ்காநிற்கும், தனமாகிய வரையின்கண்ணே ஏறும் கூந்தலாகிய நாட்டின்கண்ணே திரியாநிற்குமென அவன் குறிப்பறியாநிற்றல். | | ஏந்திய கண்ணிய ருள்ளமிங் கேசென்ற தெண்ணின்மெய்யே | | | காந்திய பொற்கொடி யன்னா ணிதம்பக் கடன்முழுகும் | | | போந்திளங் கொங்கை வரையூ டிவரும்பொங் குந்திமிரஞ் | | | சீந்திய கூந்த னெடுங்கான் புகுந்து திரிகிற்குமே. |
(இ - ள்.) கையிற்றாங்கிய பூங்கண்ணியை யுடையராகிய இவருள்ளம் இங்கே சென்றதைக் கருதின் உண்மையாக ஒளியினையுடைய பொன்னங்கொடி அன்னவள் கடிதடமாகிய கடலின் மூழ்குதல் செய்யும். சென்று இளமை பொருந்திய தனங்களாகிய வரையின்நடுவிலேறுதல் செய்யும். மிக்க இருளினைச் சீறாநின்ற கூந்தலாகிய நெடிய காட்டின்கண்ணே புகுதல்செய்து திரியா நிற்கின்றதென்றா ளென்க. (வி - ம்.) காந்திய - ஒளியுள்ள. நிதம்பம் - கடிதடம். சீந்திய - கோபிக்கின்ற. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : துணிந்துணர்தல். (214) தளிரியற் பாங்கி தலைவி குறிப்பறிதல் அஃதாவது தலைவன் குறிப்பறிந்த பாங்கி தலைவியின் குறிப்பினையும் அறியாநிற்றல். | | வண்டென வன்பர் மலர்முகம் பாயு மலர்க்கரத்துத் | | | தண்டளிர்க் கோதை சுலாவுந் தயங்குகட் பார்வையந்தேன் | | | மொண்டுணு முள்ளே களிக்கும் புறத்து முனிந்தனபோற் | | | கண்டிடுங் கண்டன மென்மொழி மாதர் கயற்கண்களே. |
(இ - ள்.) கண்டினையொத்த மெல்லிய மொழியினையுடைய தலைவியின் கயன்மீன்போன்ற கண்கள் வண்டென்று கண்டோர் கருதும் வண்ணம். அன்பினையுடைய தலைவன் முகத்தின்கட் பாயாநிற்கும். மலர்போன்ற அத்தலைவன் கையின்கண்ணுள்ள மாலையினிடத்துச் சுற்றுதல் செய்யும். விளங்காநின்ற கண்பார்வையாகிய அழகிய மதுவினை மொண்டுண்ணாநிற்கும். தம்முள்ளே களித்தல் செய்யாநிற்கும். வெளியில் கோபங் கொண்டவைபோலப் பார்த்தல் செய்யுமென்க. (வி - ம்.) புறத்து - வெளியில். முனிவு - கோபம். கண்டன மென்மொழி - கற்கண்டினையொத்த மொழி. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : துணிந்துணர்தல். (215) |