பக்கம் எண் :

களவுப் படலம்1019

(வி - ம்.) கலைத்தல் - கலைதல். மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு நாடல்.

(219)

பொற்றொடிப்பாங்கி புணர்ச்சிகூறல்

அஃதாவது சுனையாடல்கூறி நகையாநின்ற தோழி அதுகிடக்க நீயாடிய அச்சுனை கொங்கைக்குறியும், கவுட்குறியும், இதழ்க்குறியும். வெரிநில் உற்பலக்குறியும் பிறவும் பொறிக்க வல்லதோ சொல்வாயாக வெனப் புணர்ச்சியுரையா நிற்றல்.

 மயிலடி கொங்கை பொறிப்ப மணிகள் கவுட்கிடத்தப்
 பயிலிதழ் மூடிகஞ் சேர்த்த வெரிநூற் பலம்வரிப்பக்
 குயிலிசை மென்மொழி யாய்மற்றுஞ் சாலக் குயிற்றவற்றோ
 வெயிலியல் பன்மணி சூழ்வெற்பின் வாய்நம் வியன்சுனையே.

(இ - ள்.) குயிலின் இசைபோன்ற மெல்லிய மொழியினையுடையவளே! பிரகாசத்தினை இயல்பாகக் கொண்ட பலமணிகள் சுற்றிய மலையினிடத்துள்ள நம் பெரியசுனை (சந்தனக்குழம்பான்) மயிலினடி போன்ற (தொய்யிற் கோலத்தை) கொங்கையினிடத்து வரையவும், முத்துப்போன்ற பற்களின் குறிகளைக் கன்னங்களிற் றங்கச்செய்யவும், இதழ்களிடத்து (கூட்டத்து)ப் பழகுகின்ற மூடிகமென்னும் (இதழ்க் குறியினை) சேரச்செய்யவும் மிக ஏனைய குறிகளையும் பொறிக்கும் வல்லமையுளதோ சொல்வாயாக வென்றா ளென்க.

(வி - ம்.) சந்தனக் குழம்பான் தலைவன் மயிலின் அடிபோலக் கொங்கையிற் றீட்டலின் மயிலடியென்றார். மணி - முத்து. முத்துப் போன்ற பற்களின்குறி. முத்தங்கொடுக்குங் காலத்து அழுந்தலின் "கவுட்கிடத்த" வென்றார். அதரபானஞ் செய்யுங் காலத்துளவாங் குறியினை" பயிலிதழ் மூடிகமென்றார். முதுகில் உற்பல வடிவாகச் சந்தனக்குழம்பாற் கோலஞ்செய்தலின் "வெரி நுற்பலம் வரிப்ப" என்றார். மூடிகம் என்னும் குறி இஃதென்பதனை மாரதந்திரத்தா னறிக. குயிறல் - எழுதல். வற்று - வல்லது. மெய்ப்பாடு : நகை. பயன் : கரவு
நாடியுணர்தல்.

(220)

அவ்வளைப் பாங்கி அணங்கெனவயிர்த்தல்

அஃதாவது புணர்ச்சி துணிந்த பாங்கி தலைவியைப் பார்த்து ஐயுற்றவள் போல் அணங்கே! சுனையாடச் சென்றனளாகிய எங்கள் தலைவியின் வடிவமும் நின் வடிவமும் ஒத்துள்ளன. அரதனத்தினிடத்து நிழலைச் செய்யத் தோன்றும் வடிவமெனத் துணிந்தேன். முதல் வடிவம் நீயோ அவளோ சொல்லுவாயாகவென நகையாநிற்றல்.

 மணங்கேழ் சுனைகுடைந் தாடச்சென் றாளும் வரைவளரோர்
 அணங்கே யெனநிற்கு நீயு முருவு மதுநிழற்ற
 இணங்கோர் மணியிற் கதித்த வுருவு மெனத்துணிந்தாங்
 குணங்கேழ் முதலுரு நீயோ வவளோ குறித்துரையே.