பக்கம் எண் :

1020தணிகைப் புராணம்

(இ - ள்.) நறுமணம் பொருந்திய சுனையிலுளைந்து ஆடச்சென்ற (எங்கள்) தலைவியும் இம்மலையினிடத்து வளர்கின்ற ஒப்பற்ற தெய்வமாதென நிற்குநீயும். வடிவுடைப் பொருளும் அவ்வடிவுடைப் பொருள் நிழலைச்செய்யப் பொருந்திய மணியின்கட் டோன்றிய வடிவமெனத் துணிவுற்றனம். குணம்பொருந்திய முதல்வடிவம் நீயோ, (அன்றி எங்கள் தலைவியாகிய) அவடானோ குறித்துச் சொல்வாயாகவென்றன ளென்க.

(வி - ம்.) நிழற்றல் - சாயையுளவாக்கல். கதித்தல் - தோன்றல். முதலுரு - முன்வடிவம், இதனை வடநூலார் பிம்பமென்பர். பிம்பத்தால் மணியிற் றோன்றுஞ் சாயையைப் பிரதிவிம்ப மென்பர். மெய்ப்பாடு : நகை. பயன் : கரவுநாடி யுணர்தல். இதன்கண் நாணுவ பலவும் நாடினாள் இனி நடுங்கநாட்டம் காணிய கூறுகின்றார்.

(221)

நாணுவ பலவும் நாடியதோழி
வாணுத னடுக்கங் காணிய வுரைத்தல்

அஃதாவது அணங்கென வயிர்த்தலாற் கூட்டமுண்மை யுணர்ந்தன ளாயினும். தலைமகள் பெருநாணினளாகலானும் தான் இறப்பவிழிந்த குற்றேவன் மகளாதலானும் பின்னரும் தான் சொல்லாடாது அவடன்னைக் கொண்டுகேட்பது காரணமாக நெருங்கிநின்று ஒருகளிறு ஒருவனை யெதிர்ப்பட்டதெனத் தோழி அவளை நடுங்க நாடாநிற்றல்.

 அழல்சுழித் தார்க்கு மடல்வே லொருவ ரணிநிறத்து
 நிழல்சுழித் தார்க்குங் களிறொன்று நேர்சென்று பாய்ந்ததந்தோ
 கழல்சுழித் தாங்கே புடையின தாக்கிக்கை வேறிரித்துச்
 சுழல்சுழித் தோடுங்கண் ணாய்வரை வாய்வெற்றி தோற்றினரே.

(இ - ள்.) தீயானது சீறுதலைச் செய்து முழங்கும் கோறற்றொழிலமைந்த வேற்படையையுடைய ஒருவர் அழகிய மார்பின்கண் தன் நிழலை (வேறொரு யானையெனக் கருதிய மயக்கத்தால்) சீறிமுழங்கும் யானையொன்று ஐயகோ நேரேசென்று பாய்தல் செய்தது (அவர்தம்) அடிகளை மாறுதல்செய்து அஞ்ஞான்றே (அவ்வியானையை) பக்கத்துள்ளதாகச் செய்து பலதிக்கினுஞ் சுற்றுதலோடு காதின்மேற் சீற்ற முற்றுச்செல்லும் கண்ணையுடையவளே. இம்மலையினிடத்து வெற்றி தோன்றச் செய்தன ரென்க.

(வி - ம்.) சுழித்தல் - கோபித்தல். கழல்சுழித்தல் : அடிமாறியாடல். சுழலல் - சுழற்றுதல். களிறொன்று நேர்சென்று பாய்ந்ததெனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறப்பட்டதெனினும் அமையும். அந்தோ வென்பது இரக்கத்தின்கட் குறிப்பு. களிறுபாய்ந்ததெனத் தோழியுரைப்பத் தலைமகள்நாடி நடுங்கநிற்கக் கண்டு புடையினதாக்கி, வரைவாய் வெற்றி தோற்றினரே என நடுக்கந் தீர்த்த தாயிற்று. மெய்ப்பாடு : நகை. பயன் : நடுங்கநாடிக் கரவுநாடியுணர்தல்.

(222)