பக்கம் எண் :

1022தணிகைப் புராணம்

பிணக்கறு தோழி பெருமையினகற்றல்

அஃதாவது தலைவன் ஏவின செய்வலென்றிரப்ப அதனையறிந்த தோழி நீதியைச் செலுத்துந் தலைவள்ளலென உன்னவயவங்கள் உரையாநின்றன. ஆதலான் இத்தன்மைத்தாகிய நீ குன்றகச் சீறூரின் வாழ்க்கை குறிப்பது தகுதியன்றென வுரைத்தல்.

 விரையாக் கலிமும்மை வேயகத் தோரும் விழுமிதென
 வரையாக் கடன்படும் வள்ளல்கொ லாமென மாண்டவுறுப்
 புரையாக் கிடந்தன வுத்தகு நீகட லுண்டெழுகார்
 குரையாக் கலவுகுன் றிற்சிறு வாழ்க்கை குறிப்பதன்றே.

(இ - ள்.) மூன்றுலகத்தின்கண்ணுள்ளாரும் ஆணையை மேலானதென்று வரைந்து முறைப்படும் வள்ளற்றன்மையை யுடையானென்று மாட்சிமைப்பட்ட அவயவங்கள் உரைத்துக்கிடந்த அத்தன்மைத்தாகிய நீ கடலுண்ணீரை மொண்டெழுகின்ற மேகங்கள் முழங்கல் செய்து கலக்கின்ற குன்றத்தின்கண்ணுள்ள சிற்றில்வாழ்க்கையைக் குறிப்பது (நின்பெருமைக்கு) மாறுபாடல்லவா வென்றா ளென்க.

(வி - ம்.) விரையாக்கலி - மூவுலகத்துஞ் செல்லுமாணை. வேய் - உலகம். கடன்படும் - முறைபடும். உரையா - உரைத்து. குரையா - முழங்கி. இவைகள் செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். அன்றுதல் - மாறுபடுதல். "அன்றினார்புர மெரித்த வணிநகையாளன் செல்வன்" என்னும் திருவாக்கா னறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : நீக்கல்.                                                                                        

(225)

இழிகுலத்தாளெனு மேந்திழைப் பாங்கிக்குத்
தொழுகுலத்தாளெனத் தோன்றல் செப்பல்

அஃதாவது இழிகுலத்தாளெனக் கூறி அகற்றிய பாங்கிக்குத் திருமால் தனது குலக்கொழுந் தென்பான் கருவான்முக்கட் பெருமான் தன் குலத்தைப் பேணவருமா தென்பான் ஏனைய தேவர்களெண்ணமிஃதென வகுத்துரைக்க வியலாதெனக் கூறாநிற்றல்.

 திருமா றனது குலக்கொழுந் தென்றுசிந் திக்குமுக்கட்
 பெருமான் றனது குலத்தினைப் பேணுமப் பெற்றிகொள்ள
 வருமா தெனமுன்னு மும்பர்க ளெண்ணம் வகுப்ப வொண்ணா
 துருமாந்தளிரன்ன வொண்டொடிப் பேதையை யொண்ணுதலே.

(இ - ள்.) ஒளிபொருந்திய நுதலினை யுடையவளே, மாவின்றளிர் போன்ற வடிவினையும் ஒளியுள்ள வளையலையணிந்த பேதைப்பருவத்தையுடைய இத்தலைவியைத் திருமாலானவன் தன் குலக்கொழுந்தென்று நினைப்பன். மூன்று கண்ணினையுடைய பெருமையையுடைய இறைவன் தன் குலத்தினை விரும்புகின்ற அத்தன்மையைக் கொள்ளவருமா தென்று நினைத்தல் செய்வன். (இவளைக் கருதி ஏனைய) தேவர்கள் எண்ணங்களை என்னால் வகுத்துச்சொல்ல முடியாதென்றா னென்க.