பக்கம் எண் :

களவுப் படலம்1025

(இ - ள்.) தேமலோடுகூடிய மெல்லிய அணிகலன்களை யணிந்த தனங்களையுடையவளே (யான்) இவண்பொருந்தி இயற்றும்வண்ணம் தொடர்வதாகிய மணம் உலகொழுக்கம் கடவாததும் பெரியமறையின் கண்ணதும் (ஒத்த) அன்பினையுடைய மேலோர் உத்தரகுரு முதலிய போகபூமியின்கட் சென்று எக்காலத்தும் நீடித்துவாழும்படி செய்வதும் உயர்ந்த வின்பமாவதுமாகும் மற்றைய விரும்புவன மணங்கள் வருத்தமுறும் வண்ணம் தொடர்வனவேயாகு மென்றா னென்க.

(வி - ம்.) மற்றையமன்றல் - (கந்தருவ வழக்கத்தினையொத்த களவொழிந்த) ஏனைய ஏழு மணங்கள். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : மதியுடம்படுத்தல்.

(230)

ஆயிடைப்பாங்கி யருமையினகற்றல்

அஃதாவது யான் நெறியில் செயலை நினைந்திலனெனக் கூறிய தலைவனைத் தோழி அருமைகூறி நீக்கல்.

 நண்ணுங் கருத்துடை வீராட்ட காசத்து நாதனருள்
 பண்ணுங் கருத்தும் பயிலுங் கருத்தும்பல் கான்மறந்து
 கண்ணுங் கருத்து மதன்வழிக் கண்ணுங் கலந்ததொப்பாம்
 எண்ணுங் கருத்தவெம் மாதோ டெனக்கிங் கியல்வகையே.

(இ - ள்.) யாவரும் மேலாக நினைக்கத்தக்க தலைவனே! எமது தலைவியோடு எனக்குப் பொருந்துகின்ற வகை (தனது திருவடிக்கண் யாவரும்) பொருந்தும் கருத்தை யுடையதாகிய வீராட்டகாசத்தின்கண் எழுந்தருளிய தலைவன் (ஆன்மாக்களுக்கு) திருவருள்பாலிக்கும் கருத்தும் (அவன் றோன்றாத்துணையாய் ஆன்மாக்களோடு அத்துவிதமாகக் கலந்து) பழகுகின்ற (அவன் திருவுள்ளக்) கருத்தினையும் பலமுறை மறந்து கருதுகின்ற எண்ணமும் அவ்வெண்ணத்தின் வழிக்கட் பொறியும் கலப்புற்றிருந்ததற் கொப்பா மென்றா ளென்க.

(வி - ம்.) இறைவன்றன் கைம்மாறிலவாகிய கருணையால் ஆன் மாக்களுக்கு திருவருள்பாலிக்கும் எண்ணத்தினையும் தோன்றாத் துணையாய் உடலினின்று உபகரிக்கும் உதவியையும் மறந்து கருதுகின்ற அறிவும் அவ்வறிவில்வழிக் கண்ணும் அத்துவிதமாகக் கலந்துநின்றாற் போல அவளினீங்காது உசாத்துணையாகி அவளைத் தணிவித்த என்னை மறந்து செல்லாநிற்கின்றாள். யான் குற்றேவன் மகளாகலின் அவள் கருத்தின்வண்ணம் யான் ஒழுகலின்றி வேறென்னை செயலுளதென்பாள். எம்மாதோடெனக் கிங்கியல்வகை, கண்ணும் கருத்தும் அதன் வழிக்கண்ணும் கலந்த தொப்பா மென்றனள். கண்ணும் - கருதுகின்ற. அது - அக்கருத்து. எண்ணுங் கருத்த - யாவரும் இறைவனென நினைக்கும் தலைவ. மெய்ப்பாடு : பெருமையைச் சார்ந்த இளிவரல். பயன் : அருமைகூறி நீக்கல்.

(231)

மன்னவன் நின்வழி முன்னுவளென்றல்

அஃதாவது அருமை கூறியகற்றிய பாங்கி என்னை யிம்மயக்கத்தி னின்றும் நீக்கக் கருதுவையானால் அவள் நினது ஏவலாற்றன்னை எற்குத் தருவாளெனக் கூறாநிற்றல்.