| | நினைப்பித் தடுத்தருள் வீராட்ட காச நிமலன்மற்றும் | | | முனைப்பித் துயிர்வழி நின்றதன் றோமன முற்றும்விற்ற | | | எனைப்பித்தி னீக்க விரங்குவை யேலினி மாதர்நல்லாள் | | | தனைப்பித்தி கைக்குழ லாய்நின தேவலிற் றந்திடுமே. |
(இ - ள்.) சிறு சண்பகப் பூவானாகிய கூந்தலையுடையவளே வீராட்டகாச மென்னுந் தலத்தி லெழுந்தருளிய மலமற்ற இறைவன் (கேவலாவத்தையில் பாடாணம்போல் அறிவிச்சை செயலற்றுக்கிடந்த உயிர்களுக்கு அறிவிச்சை செயலினைத் தந்து தன்னை) நினைக்கச்செய்து பொருந்திய அருட்சத்தி (தனுகரண புவனபோகங்களைத் தந்து) தானொரு முதலென முனைத்தெழுமாறு செய்து (முனைந்தெழுந்த) அவ்வான்மாக்கள் அறிவிச்சைகளின்பின் (தான் முனைத்துத் தோன்றா வண்ணம்) நின்றதல்லவா அதுபோல மனமுழுதினை விலைப்படுத்திய என்னை (இத்தலைவி காரணமாக நிகழும்) பித்தினின்றும் நீக்க நீ கருதுவையாயின் இனி யாவரும் காதலிக்கத்தக்க நல்லவள் தன்னை நினது கட்டளையின் வண்ணம் எனக்குத் தந்திடுவா ளென்க. இறைவனருள் கேவலத்திற் கட்டுண்ட பாடாணம்போற் கிடந்த ஆன்மாக்களுக்கு அறிவிச்சை செயல்களைத் தந்து நினைக்கச்செய்து தனுகரண புவனபோகங்களைக் கொடுக்க அவ்வான்மாக்கள் செய்ந்நன்றி மறந்து தான்முதலென நினைத்த காலத்து அச்சத்தி முனைப்பின்றி அதன்பின் அடங்கி அதன்வழி நடத்தல்போல நீ என்மேற் கருணை செய்வாயாயின் அத்தலைவி தன்னை நின்கட்டளையின் வண்ணத்தானே தருவாளென்க. (வி - ம்.) அடுத்தருள் பெயரெச்சத் திறுதிதொக்கது. மற்று - அசை. முனைத்தல் - லோகத் துள்முகமாதல். பித்து - அன்பு. மாதர் - காதல். பித்திகை - சிறுசண்பகம். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறுதல். (232) அவளறிவுறுக்கவென் றிகுளையகற்றல் அஃதாவது நின் னேவலிற் றன்னை யெனக்குரிமை யாக்குவளெனக் கூறிய தலைவனைத் தோழிநோக்கி நீயே அவட்குச் சொல்லென வகற்றல். | | சடம்படு மாவியு மாவியு மாயிற்சந் திக்கவிடை | | | யுடம்படு மெய்யொன் றுறவேண் டுவதுட லோடுயிர்வந் | | | திடம்படு மாயி னிடையொன்று வேண்டுவ தெற்றுக்கண்ணான் | | | மடம்படு கண்ணிக்கு நீயே மொழிய வலித்தியின்றே. |
(இ - ள்.) மெய்யெழுத்தின்மேலேறிய வுயிரெழுத்தும் (வேறொரு) உயிரெழுத்துமா யிருப்பின் நிலைமொழியீறும் வருமொழி முதலும் ஒன்றுபட்டுச் சந்தியாநிற்க உடம்படு மெய்யென ஓரெழுத்துப் பொருந்த வேண்டுவது. மெய்யினோடு உயிரெழுத்து வந்து பொருந்துமாயின் இடைக்கண் வேறொரு எழுத்து எதற்கு. ஆதலால் இளமைபொருந்திய கண்ணினையுடையாட்கு நின் குறையை நீயே சொல்ல நினைப்பாயாக வென்றா ளென்க. |