பக்கம் எண் :

களவுப் படலம்1029

 தணியா வருள்வளர் வீராட்ட காசத் தலைவர்விழை
 அணியா மிருகமெய் தீரவை தாமிங் கடுத்துவிடிற்
 பிணியா முழந்துயிர் மாய்வதல் லாற்பிழைப் புண்டுகொல்லோ
 துணியா வறிவு புறத்தின்றி முற்றிய சூழ்ச்சியரே.

(இ - ள்.) பல வேதுக்களாற் றுணிதல்செய்யாத (நிச்சயிக்காத) அறிவு புறத்தின்கண்ணன்றி அகத்தின்கண்ணே நிறைந்த ஆராய்ச்சியினை யுடையவரே. வீராட்டகாசத்தின்கண்ணுள்ள தலைவரும் விரும்பத்தக்க அழகாகிய மான், வேங்கை, சிங்கம், பன்றி முதலிய விலங்கினங்களை எய்தீர். அவைகள் இவண்பொருந்தின் யாங்கள் நோயுழந்து உயிர்மாய்தலை யன்றிப் பிழைத்தலும் உண்டோவென்றா ளென்க.

(வி - ம்.) அணி - அலங்காரமுமாம். உழத்தல் - வருந்தல். மெய்ப்பாடு : நகை. பயன் : செவ்விபெறல்.

(237)

பேதைமையூட்டிய பெய்வளைத்தோழிக்குக்
காதலன் பொருந்தக் கட்டுரைத்தல்

அஃதாவது தனதறியாமையை வெளிப்படுத்திய தோழிக்குத் தலைவன் அவளியையு மாற்றானுறுதிச் சொற்கூறல்.

 மிருகக் குலங்களெஞ் சாத்தனி வேட்டை விளைக்குமென்னெஞ்
 சுருகக் கடவிய வோடரிக் கட்படை யொண்முகத்தீர்
 கருகக் கரம்வைத்த பல்லவம் பாய்ந்து கலக்கியுயிர்
 பருகக் கடுகிய மாவஞ்சு வீரெனப் பார்த்திலமே.

(இ - ள்.) விலங்கினங்கள்மாட்டுக் குறைதலிலவாகிய ஒப்பற்ற வேட்டத்தினைச் செய்யாநின்ற எனது நெஞ்சமும் உருகும்வண்ணம் செலுத்தப்பெற்ற காதளவோடுகின்ற அரிபரந்த கண்ணாகிய வேற்படையையுடைய முகத்தினையுடையவர்களே. (வெயிலான்) கருகா நிற்கக் கையினிடத்து வைத்துள்ள தளிர்பாய்தலான் கலக்கமுற்று உங்களுயிரை யுண்ணும்பொருட்டு விரைவுற்றுவந்த மாவினைக் கண்டச்சங்கொள்வீரென யாமறிந்தில மென்க.

(வி - ம்.) பல்லவம் - தளிர். கடுகிய - விரைந்த. மா - மிருகம். மெய்ப்பாடு : நகை. பயன் : செவ்விபெறல்.

(238)

பிணைநடைத் தலைவியைப் பேதைமையூட்டித்
துணைமுலைப்பாங்கி துணைவனையகற்றல்

அஃதாவது தன்னைப் பேதைமையூட்டிய தோழி தலைவிக்கும் பேதைமையூட்டிப் புனங்காக்கும்பொருட்டுப் பல உயிர்களையும் வருத்துகின்றவள் உன்றோள் மெலிவெங்ஙன மறிகிற்பாளெனக் கூறியகற்றல்.

 கலைத்தொழிற் குள்வைத் தளித்தற்குக் கைவைத்த காமர்வெற்பா
 கொலைத்தொழிற் குள்ளமுங் கையுங் குறித்துவைத் தார்கடங்கை
 மலைத்தொகு தீம்புனங் காப்பான் பலவுயிர் வாட்டுகிற்பாள்
 சிலைத்தொழிற் றோண்மெலி வெங்ஙன மோர்ந்தருள் செய்யுமன்றே.