| (இ - ள்.) கலைகற்றலாகிய செயலினுக்கு மனதை நிலைக்களனாக வைத்துத் திருவருள்பாலித்தற்குத் திருக்கையினை வைத்துள்ள யாவரும் விரும்பத்தக்க மலையையுடையவனே! கோறற் செயலினுக்குத் தங்கள் மனதையும் கையினையும் கருதி வைத்தார்களாகிய மலைவாழ்நர்கள் தங்கையானவள் மலையினிடத்துத் தொகுக்கப்பெற்ற இனிய தினைப் புனத்தினைக் காக்கும்பொருட்டு (அப்புனத்தினை யழிக்கவரும்) பல வுயிர்களையும் வருத்துகின்ற அவள் விற்றொழில் முற்றுப்பெற்ற நின் தோள்களின் மெலிவினையாய்ந்து எங்ஙன மருள்செய்வா ளென்றா ளென்க. (வி - ம்.) அளித்தற்குக் கைவைத்தல் - அபயஸ்தம். உள்ளமுங் கையும் மலைவாழ்நர்க்குக் கோறற்றொழிலின்றி வேறு செயலிற் பயின்றில வென்பார். "கொலைத்தொழிற் குள்ளமுங்கையும் குறித்து வைத்தார்" என்றார். அவர் தங்கையாகலின் அவளுமச் செயலுடையாளாகலின் பலவுயிர் வாட்டுகிற்பா ளென்றார். மெய்ப்பாடு : நகை. பயன் : செவ்விபெறல்; (239) பேரறிவுடைமை பெருந்தகை கிளத்தல் அஃதாவது தலைவிக்குப் பேதைமையூட்டி அகற்றிய தோழி மறுத்தாளல்லள் எனக் கருதித் தலைவன் தலைவி சிறுபுன்குடிலிற் றோன்றினும் யான் வருந்துந் துன்பினை யறிந்து பாதுகாக்குந் தன்மையையுடையள் எனக் கூறாநிற்றல். | | கடங்கலுழ் வேழ முதலா மிருகக் கணந்துமிக்கும் | | | மடங்கலுந் தன்னினங் காப்பதன் றோமதி வாணுதலாய் | | | தொடங்கரு வன்கொலைப் புன்குடித் தோற்ற முறினுமன்ற | | | படங்கிள ரல்குலென் னோயறிந் தோம்பும் பரிசினளே. |
(இ - ள்.) மதியினையொத்த நுதலினையுடையாளே. மதநீரைக் கொட்டுகின்ற யானை முதலிய விலங்கின் றொகுதியைக் கெடுக்கும் சிங்கமுந் தன்னினத்தைக் காக்குமல்லவா? அங்ஙனமே செய்தற் கருமை யாகிய வலிய கொலைத் தொழிலினையுடைய புல்லியகுடியின்கட் பிறந்து பொருந்தியிருப்பினும் நிச்சயமாக (அரவின்) படம்போல விளங்குகின்ற அல்குலினையுடையாள் யானுற்ற நோயினைத் தெரிந்து பாதுகாக்குந் தன்மையுடையா ளென்றானென்க. (வி - ம்.) அல்குல் : ஆகுபெயர். மன்ற - நிச்சயமாக. ஓம்புதல் - பாதுகாத்தல். பரிசு - தன்மை. மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த பெருமிதம். பயன் : மூதறிவுடைமை மொழிதல். (240) விளைவில ளவளென விகுளைவிலக்கல் அஃதாவது பேரறிவுடைமை தலைவன் கிளந்தமை கேட்டதோழி தலைவன் தழைகொண்டு சேறலைநோக்கி இக்கொம்பு போல்பவளாகிய தலைவிக்குக் கொங்கைகள் பொடித்தில, பிள்ளைமையான் அளவுகடந்து கண்கள் பரந்திலவெனக் கூறாநிற்றல். |