பக்கம் எண் :

களவுப் படலம்1031

 கரம்பை திரம்வளர் காரனை யாய்கனி வேட்டிளம்பூ
 வரம்பையை மந்தி யடுக்கு மடுக்கத் தகன்குறிச்சிக்
 குரம்பையிற் கொம்புக்குக் கொங்கை யரும்பில பிள்ளைமையின்
 வரம்பை யிகந்து வயங்கரிக் கண்கண் மலர்ந்திலவே.

(இ - ள்.) கைகளானவை நாட்டினை வளரச்செய்கின்ற மேகத்தை யொத்த வள்ளற்றன்மை யுடையானே பழம் விழைந்து இளமையான பூவையுடைய வாழைகளைக் குரக்கினங்கள் பொருந்தும் மலையின்கண்ணுள்ள அகன்ற சீறூரின்கட் சிறிய வில்லிற்பொருந்திய பூங்கொம்பு போல்பவளாகிய தலைவிக்குக் கொங்கைகள் பொடித்தில. பிள்ளைமைத்தன்மையான் அளவினைக்கடந்து விளங்குகின்ற அரிபரந்த கண்கள் விரிந்திலவென்றா ளென்க.

(வி - ம்.) பைதிரம் - நாடு. அரம்பை - வாழை. வரம்பு - அளவு. மந்திகள் பழம் விரும்பி முற்றாதவாழையை அடுத்தல்போல நீ கூட்டங் கருதி முற்றா வியல்பினையுடைய இவளை யடுத்தனையென உள்ளுறைகொள்ளக் கிடந்தமை யுணர்க. மெய்ப்பாடு : நகை. பயன் : விளைவிலளெனக் கூறல்.

(241)

இளையவளாயினு மென்னுயிர்க் கணங்கெனத்
தளையவிழ் தாரோன் தாழ்ந்துரைத்தல்

அஃதாவது முதிர்ச்சியிலளெனக் கூறினளன்றித் தோழி மறுத்தாளல்லளெனக் கருதித் தலைவன் இம்மலைநாட்டினிடத்துள்ள இவள் இளமைத்தன்மை யுடையளாயினும் என்னுயிர்க் கணங்குபோல்வாளெனக் கூறாநிற்றல்.

 உளையவ ளாயுயிர் ஞான்றே மடங்கலொண் மாக்குழவி
 அளையவ ளாயெழு வேழத் தயிற்கோட் டவிர்முருந்து
 களையவ ளாயெழு கல்லதர் நாட்டுக் கனங்குழையாள்
 இளையவ ளாயினு மாரணங் கென்னுயிர்க் கேந்திழையே.

(இ - ள்.) தாங்கப்பெற்ற அணிகலன்களையுடையாளே! வருந்தச் சுற்ற (தான்) பிறந்த வஞ்ஞான்றே சிங்கத்தின் பெரியகுட்டி (ஏனைப்பொருள்களை) கலக்குதலுடையனவாய்ச் சுற்றியெழுகின்ற யானையின் கூரிய கொம்பினிடத்து விளங்குகின்ற அடிப்பாகத்தை (அதினின்றும்) நீக்கியுண்ணச் சுற்றியெழுகின்ற நெறியினை யுடைத்தாகிய மலைநாட்டின்கண்ணுள்ள கனவிய காதணியை யுடையவள் இளையளாயிருப்பினும் என்னுயிரினைத் தீண்டி வருத்தும் அரியதெய்வப் பெண்ணாவள் என்றாளென்க.

(வி - ம்.) உளைய - வருந்த. வளாவுதல் - சுற்றுதல். அளைதல் - கலத்தல். முருந்து - கொம்பின் அடிப்பாகம். களைய - நீக்க. அணங்கு - தீண்டிவருத்தும் தெய்வப்பெண். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறல்.

(242)