| இவற்றிளமுலையா ளிணக்கமறிந்திலளெனக் கவற்றிய வுளனொடு காளை நிற்றல் அஃதாவது இளையளாயினும் என்னுயிர்க்கணங்காவ ளெனத் தாழ்ந்துரைத்த தலைவன் இவள் முன்னுறு புணர்ச்சி யறிந்திலளென வருந்திய மனத்தொடு தலைவன் கூறாநிற்றல். | | தளவைத் தகர்த்த தவளத்த வாணகைத் தண்மதியப் | | | பிளவைத் தணித்த பிணைநுதற் பெய்வளைத் தோளியொடாங் | | | களவைத் தெரித்திலள் பாங்கியு நீயுங் கதித்தவிழை | | | வளவைத் தணித்திலை நெஞ்சேயென் செய்து மகன்வரைக்கே. |
(இ - ள்.) முல்லையரும்புகளை (வனப்பழியும் வண்ணம்) தகர்த்தலைச் செய்த வெள்ளிய ஒளிபொருந்திய பல்லினையும் தண்ணிய மதியின் கீற்றைக் (வடிவான்) கீழ்ப்படுத்திய விரும்பத்தக்க நுதலினையும் இடப்பட்ட வளையினையுமுடைய தோளையுடைய தலைவியுடன் உளவாகுங் களவுப்புணர்ச்சியினை என்பாற் தெரிந்தாளில்லைப் பாங்கியும். நெஞ்சமே நீயும் முறுகிய விருப்பத்தினளவைத் தணித்தாயல்லை. இம்மலையினிடத்து யாம் என் செய்வேம் என்றானென்க. (வி - ம்.) தளவு - முல்லை, முதலைக்கூறச் சினையறி கிளவி அரும்பு. மதியப் பிளவு - பிறைச்சந்திரன். பிணைவிருப்பம், பிணையும் பேணும் பெட்பின் பொருள. ஆம்களவு பெயரெச்சத் துயிர்மெய் கெட்டது. களவு - களவுப் புணர்ச்சி. தெரித்திலள் விவ்விகுதி தொக்கு நின்றது. கதித்த - முறுகிய. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : செவ்விபெறாது வருந்துதல். (243) தன்னறி வுளதெனத் தலைவற் கிகுளை முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்துரைத்தல் அஃதாவது முன்னுறு புணர்ச்சியறிந்தில ளெனக் கவன்ற வுள்ளத்தோடு நின்ற தலைவனுக்கு மயில்பொரித்த பல குஞ்சுகளில் தோகையை யுடைய களிப்பையுடைய குஞ்சு வயதான் முதிர்ந்ததெனக் கருதுகின்ற மலையினிடத்து இல்லாத வம்பு பொருந்தவோர் எண்ணமுளதென முன்னுறு புணர்ச்சி கூறாநிற்றல். | | பலாவம் பொழிலி னொருதா யுயிர்த்த பலமயிற்கும் | | | கலாவம் புனைந்த களிமயின் மூத்த தெனக்கருதச் | | | சுலாவம் பரநிமிர் வெற்பினெம் மாதுக்குத் தோன்றன்முன்னம் | | | இலாவம்பு வாய்ப்ப முதுக்குறைந் தாளென வெண்ணமுண்டே. |
(இ - ள்.) பலாமரங்கள் நிறைந்த அழகிய சோலையிடத்து ஒரு தாய் பொரித்த பலமயிற் குஞ்சுகளுள் வைத்துத் தோகையான் அலங்காரமுள்ள மயிற்குஞ்சு மூத்ததென்று யாவரும் கருதுகின்ற சுற்றிய ஆகாயத்தின் கண்ணுயர்ந்த மலையினிடத்து எமது தலைவிக்கு இலவாகிய புதுமை பொருந்தப் பேரறிவுற்றன ளெனவொரு நினைவுள தென்றா னென்க. |