பக்கம் எண் :

களவுப் படலம்1039

உள்ளமானது வருந்தும்வண்ணம் அழகிய தாமரை மலரின்கண்ணுள்ள இலக்குமியையொத்த தலைவி நிற்பளாயின் அங்ஙனம்நிற்றலே மயக்கங் காரணமாக உளவாம் நோய் பொருந்துகின்ற வீணானசெயலை நீக்கி என்னைப் பாதுகாக்கும் ஏதுவாகுமென்றா னென்க.

(வி - ம்.) தாவின் - வருத்தத்தான். உழப்போர் - செய்பவர். பிணை - விருப்பம். அவம் - வீண்செயல். வாயில் - ஏது. புனம் - காடு. மெய்ப்பாடு : உவகை. பயன் : செவ்விபெறல்.

(255)

குறையயர்ந்தேனெனப் பாங்கிகூறல்

அஃதாவது தலைவன் பாங்கியைநோக்கி யென்குறை சொல்லச் செவ்வி யிதுவாகுமென்று சொல்லப் பாங்கி நீ கூறிய குறையை மறந்தே னென்று
கூறாநிற்றல்.

 வருக்கைப் பொழிலை நினைந்தெழு மும்மத வார்மருப்புப்
 பருக்கைப் பொருப்பெதிர் வாழையங் கானம் படர்சிலம்பின்
 இருக்கைப் பொருப்பர் புதல்விய ரேங்குறை யீங்கயர்ந்தாந்
 திருக்கைப் பொருவடி வேற்பொலந் தார்ப்புயத் தேர்மன்னனே

(இ - ள்.) திருக்கையென்னும் மீனையொத்த வேற்படையையும் புயத்தையுமுடைய அழகுபொருந்திய தலைவனே! வருக்கையென்னு மொருவகைப் பலாப்பொழிலினை (பழமுண்ண) நினைந்தெழுகின்ற மும்மதங்களையும் நீண்ட மருப்பினையும் பருத்த துதிக்கையினையுமுடைய மலையையொத்த யானை தன்னெதிர்ப்பட்ட வாழைக் காட்டினிடத்துச் செல்லுகின்ற மலையின்கண் குடியிருத்தலைக்கொண்ட மலைவாழ்நர் புதல்வியாகிய யாங்கள் நீவிர்கூறிய குறையினை மறந்துவிட்டோம். இன்றேல் முடித்தலைத் தந்திருப்பே னெனக் கூறாநிற்றல்.

(வி - ம்.) பலாப்பொழிலின்கண்ணுள்ள பழத்தினை யுண்ணக் கருதிச் செலவுற்ற யானை அச்செலவின்கண் தன்னெதிர்ப்பட்ட வாழைச் சோலையிற்சென்று அச்சோலையிலுள்ள பழத்தினையுண்ணும் மலையில் வாழ்வேமாதலின் யாங்கள் எங்களுக்குரிய பலதடாக்கருமங் காரணமாக நீகூறிய குறையை அயர்த்தல் இயல்பாதலின் நாங்கள் என் செய்வோமென உள்ளுறை யுவமங்கொள்ளக் கிடந்தன. திருக்கை - ஒருவகைமீன். இம்மீனின்வால் வேற்படையின் காம்பையும் உடல் வேற்படையின் வடிவையுமொத்திருத்தலான் "திருக்கைப் பொருவடி வேலென்றார்" மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : சேட்படை.

(256)

கேடும் பீடுங்கூடிய முகூத்தா
னீடிய குறையை நாடியவ னுரைத்தல்

அஃதாவது பாங்கி குறையயர்ந்தேனெனக் கூறியதனாற் சேட்படையும் நினைவிருப்பின் நின்குறை முடித்துத் தருவேனென்பதனாற் பெருமையும் பொருந்திய முகத்தனாய் தன்பானிலவிய குறையினை ஆராய்ந்து அவன் சொல்லாநிற்றல்.