பக்கம் எண் :

1040தணிகைப் புராணம்

 உணங்கு குலாவிய தோரையஞ் சாரலொண் பூம்பொழில்வாய்
 யணங்கு கொலாமுரை யாயென் றெதிர்த்தலு மாயிழையாய்
 பிணங்கு குலாய பெரும்பணைத் தோட்பிறை வாணுதலாட்
 கிணங்கு குலாம்விழி முத்துக மூர லிலங்கினவே.

(இ - ள்.) ஆராய்ந்து அணியப்பட்ட வணிகலன்களை யுடையாளே! காய்தல் பொருந்திய மூங்கிலரிசியையுடைய அழகிய மலைப்பக்கத்தின் கண்ணுள்ள மலர்கள் பொருந்திய சோலையினிடத்துள்ள தெய்வமாது நீயோ சொல்வாயாகவென்று கூறி நானெதிர்ப்பட்ட காலத்துப் பின்னுதல் பொருந்திய பெரிய மூங்கில்போன்ற தோளினையும், பிறைச் சந்திரன்போன்ற ஒளிபொருந்திய நுதலினையு முடையவளிடத்து இயைந்து பொருந்திய கண்கள் முத்துப்போன்ற கண்ணீரைச் சிந்தச் சிரிப்பானது விளங்கின வென்க.

(வி - ம்.) உணங்குதல் - காய்தல். தோரை - மூங்கிலரிசி. மூரல் - சிரிப்பு. மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : செவ்விபெறல்.

(257)

நீக்கலினாகிய நிலைமையவ ளுரைத்தல்

அஃதாவது தலைவன் தன்குறை கூறியபின்னர் அவனை நீக்குதற்குரிய காரணங்க ளிவையென நேர்பட வுரைத்தல்.

 தண்டலை வானரம் வானரப் பூஞ்சுனைத் தாழ்வரைவாய்
 மண்டலை நாட லரிதாஞ் சிலம்பின் மறவர்குழாம்
 எண்டலை யேலா ரிடர்பெரி தாற்றுந ரென்னைசெய்கோ
 புண்டலை வேய்ந்து பொறிதும்மு வேற்கைப் புரவலனே.

(இ - ள்.) பகைவருடலின்கண்ணுள்ள இறைச்சியைத் தன்னிடத்துக்கொண்டு தீப்பொறியினை வெளியிடுகின்ற வேற்படையைக் கையிலுடைய தலைவனே! சோலையின்கண்ணுள்ள குரக்கினம் வாளின் கண்ணுலாவுகின்ற இராகுவும் பூஞ்சுனைகளுந் தங்கப்பெற்ற இம்மலை யிடத்தினின்றும் நிலத்திடைச் செல்லல் அரிதாக ஆண்டேதங்கும் சிலம்பின்கண்ணுள்ள மறவரினங்கள் (பின்வருங் காரியங்களைப்பற்றி) ஆராய்தலைத் தன்னிடத்திற் கொள்ளாராய் பெரிதும் (பிறர்க்குத்) துன்பிழைப்பவராவர் (ஆகையால் குற்றேவன் மகளாகிய யான்) உனக்கு யாது செய்வேனென வருந்தாநிற்றலென்க.

(வி - ம்.) தண்டலை - சோலை. வான் அர - ஆகாயத்திற் சஞ்சரிக்குமிராகு. தாழ் - தங்குதல். மண்டலை - மண்ணிடம். எண்டலை ஏலார் - ஆராய்தலைத் தன்னிடத்து ஏற்றுக்கொள்ளாதவர். புண் - இறைச்சி. பொறி - தீப்பொறி. தும்மல் - வெளியிடல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : சேட்படுத்தல்.

(258)

அந்நிலைநோக்கி யாண்டகை கலங்கல்

அஃதாவது தன்குறை நேராது பாங்கி சேட்படுத்தற்குரிய காரணத்தினை யறிந்த தலைவன் அவ்விடத்தினை நோக்கிக் கலங்கா நிற்றல்.