பக்கம் எண் :

களவுப் படலம்1045

கருத்துறிற் றொழிலுங் காட்டுவலென்ன
 வருத்தியிற் றலைவ னவட்கெதிர் கிளத்தல்

அஃதாவது ஐயனே மடலேறப்புகின் அவள் அவயவங்களையும் அவற்றின் செயலையும் எழுத வரிதென விலக்கிய பாங்கிக்குத் தலைவன் நீ கருதின அத்தொழிலையும் வரைந்து காட்டவல்லே னெனக் கூறா நிற்றல்.

 நவையவங் கட்ட குமாரலிங் கேச னளியருளால்
 அவையவங் கட்டழ கார முழுது மமைத்துவல்லே
 சுவையவங் கத்தொழில் காணிய வாவியுந் தோற்றவல்லேன்
 கவையவங் கொத்துழன் மால்வரை மாது கருத்துறினே.

(இ - ள்.) காட்டுப் பசுக்கள் கூட்டமாக இயங்குகின்ற மேகந்தங்கிய இம்மலையிலுள்ள மாதே (நீ இன்பமிக்க அவயவங்களின் தொழிலைத் தீட்டும்) எண்ணங்கொள்வையாயின் (ஆன்மாக்கள் ஆணவங் காரணமாக வியற்றுகின்ற) குற்றங்களையும் (அவைகளின் பயனாகிய) பாவங்களையும் நீக்குகின்ற குமாரலிங்கப்பெருமான் பெருமை பொருந்திய வருளினால் அவயவங்களையும் அவைகளின் மிக்க அழகினையும் பொருந்த முழுதுமமைத்தல் செய்து சுவையினையுடைய அவயவங்களின் செயலினை (யாவரும்) காணத்தோற்றுவிக்க வல்லமையுடையேன் என்றானென்க.

(வி - ம்.) நவை - குற்றம். அவம் - பாவம். கட்டழகு - மிகுந்த வழகு. காணிய - காண எச்சத்திரிபு. கவையவம் - காட்டா. கொத்து - கூட்டம். உழலல் - சுற்றல். மால் - மேகம். கருத்து - எண்ணம். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றாமை யுணர்த்தல்.

(266)

மெய்த்திறம் விளம்பினை யாயின்வெஃகலை
  பொய்த்திறம் விளம்பினை போலுமென்றெள்ளல்

அஃதாவது நீ கருத்துறின் அவயவங்களையும் அவற்றின் மிக்க வழகினையும் தோழியையும் அமைத்து உயிரையுந் தரவல்லேனெனக் கூறிய தலைவன்மாட்டு இங்ஙனஞ் செய்யும் வல்லமையுடையையாயின் நீ முன்னரே எம்மாதுபோன்ற கன்னியை ஆக்கிக்கொள்ளலாம். ஆதலாற் பொய்த்திறங் கூறினாயென் றெள்ளிக் கூறாநிற்றல்.

 உருத்தக வாக்கி யுயிரும் புகுத்து முயர்வுவல்லிற்
 கருத்தழி முன்னமெம் மாதே யெனவொரு கன்னிதனைத்
 திருத்தக வாக்கிக்கைக் கொண்டமை யாது திறனிலர்போல்
 வருத்தமிக் கைய விரப்பதென் னோவெங்கண் மாட்டுவந்தே.

(இ - ள்.) ஐயனே வடிவினைத் தகுதி பொருந்தவுளவாக்கி அதனிடத்து உயிரினையும் புகுத்தவல்ல உயர்ந்த செயலின் (நீ) வல்லமை யுடையையாயின் நீ (எந்தலைவி காரணமாக) கருத்தழிவதற்கு முன்னரே எம்மாதென்று (கண்டார் சொல்லும்வண்ணம்) ஒப்பற்ற ஒருகன்னியை