பக்கம் எண் :

களவுப் படலம்1047

 துணிந்தொன்றும் யான்சொல்ல வல்லேன்சுடரிமைக் குந்தரளம்
 அணிந்தொன்று கொங்கை யணங்கனை யாளடித் தாமரைக்கீழ்ப்
 பணிந்தொன்ற நின்னுளத் தாதர வோதிப் பயிற்றினல்லால்
 தணிந்தொன்று வார்க்கருள் வோயிது யான்செயத் தக்கதுவே.

(இ - ள்.) தன்னை வணங்கிப் பொருந்துமவர்கட்கு அருளிப்பாடு செய்பவனே ஒளிவிட்டு விளங்கும் முத்துக்களணியப்பெற்று ஒன்றினோடொன்று பொருந்திய தனங்களையுடைய தெய்வப்பெண்ணினை யொத்த தலைவியின்பாத தாமரையின்கண் வணங்கி நின்னுள்ளத்தின்கண்ணுள்ள அன்பினை (யெடுத்துக்) கூறிப் பயிற்சி செய்தாலல்லாமல் யான் ஒரு காரியத்தை உறுதிசெய்து குற்றேவன் மகளாதலின் உன்பால் சொல்லுதற்கு வன்மையுடையேன் (ஆதலின்) இச்செய்கையே யான் செய்யத் தக்கதாகும் வேறொன்றியலா தென்றா ளென்க.

(வி - ம்.) மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் :
ஆற்றவுரைத்தல்.

(269)

மதியுடன் படுப்ப வலித்த பாங்கி
கதுவியவுரிமை மதியொடு கிளத்தல்

அஃதாவது மடலினூக்கந் தணித்துத் தலைவன் ஆற்றுமாறு கூறிய தோழி மதியுடம்படுத்தற்குத் தனக்குரிமை யுண்டெனக் கூறாநிற்றல்.

 திருகிய வாவி யிருள்வழி நிற்பச் செறிந்தவிருள்
 அருகிய வீச னருளு மதன்வழி நிற்பதுபோற்
 பெருகிய நீரிற் பெயரி னுடங்கு பெயர்குவளாற்
 கருகிய பூங்குழற் காரிகை யீதவள் காதன்மையே.

(இ - ள்.) (காதலினால் நான்பிரமமென) மாறுபட்ட உயிர்கள் ஆணவமலத்தின் வழியே நிற்கத் திண்ணிய ஆணவமலம் இயற்கை யின்றாக் குறைந்த இறைவன் திருவருளும் அவ்வுயிரின்வழியே நிற்பது போல வாடியபூவை யணிந்த கூந்தலினையுடைய தலைவியானவள் நிறைந்த நீர்ப்பெருக்கின் யான் சொல்லின் (அவள் என்னுடன்) ஒருசேர அந்நீரினுட் செல்வாள். இத்தன்மை அவள் என்மாட்டுவைத்த அன்பின்றன்மையாகு மென்றாளென்க.

(வி - ம்.) நானே பிரமமென நினைத்து ஆணவமலத்தின்வழியே நின்ற உயிர் சென்றநெறியே இறைவன் அருட்சத்தியுஞ் சேரல்போல யான் எங்ஙனஞ் செல்வேனோ என்வழி அவளுமொழுகு மாற்றலுடைய ளென்பாள் "ஈதவள் காதன்மை" யென்றாள். கருகுதல் - வாடுதல். காதன்மை - அன்புடைமை. மெய்ப்பாடு : பெருமிதம் பயன் : நெஞ்சொடுகூறல்.

(270)

கோற் றொடித்தலைவியைக் குறைநயப்பித்தற்குத்
தெள்ளிய பாங்கி மெள்ளவுரைத்தல்

அஃதாவது தலைவியுடன்பா டறிதற்குத் தன்னுள்ளே கூறிய பாங்கி தலைவியைக் குறைநயப்பித்தற்கு அமையமறிந்து மென்மையாகக் கூறல்.