பக்கம் எண் :

1048தணிகைப் புராணம்

 மூவரு மேத்துவ தொத்தது மூரிச் சிலைமுதன்மை
 யாவரு மாற்ற வணங்குவ தொத்த திருங்கொடைக்கை
 காவரு தோற்றங் கவற்றுவ தொத்ததக் காவலரிங்
 காவரு தோற்ற நகையது நீயு மறிவதுண்டே.

(இ - ள்.) தலைவியே வலியமைந்தவில் (அயன், அரி, அரன்) முத்தேவரு மேத்துதலையொத்துள்ளது. அவன் முதன்மை எல்லோரும் மிகுதியாக வணங்குதலையொத்துள்ளது. பெரிய கொடைத் தொழிலினையுடைய கை கற்பகச்சோலை வரையாது கொடுத்து வருகின்ற தோற்றரவினை வருத்துதலை ஒத்துள்ளது. அத்தன்மையுடைய தலைவர் என்ன ஆச்சரியம் இவண்வருகின்ற காட்சி நகைப்புக்கிடமாயது. (யானேயன்றி) தலைவியே நீயும் அறிதலுண்டு ஆவன செய்வாயென்றா ளென்க.

(வி - ம்.) ஆ : இகழ்ச்சிக்குறிப்பு. மெய்ப்பாடு : நகை. பயன் : மதியுடம்படுத்தல்.

(271)

அறக்கழி வுடையன வலர்முலைப் பாங்கி
குறிப்பு வெளிப்படுத்தக் குறித்துரைத்தல்

அஃதாவது தலைவியைக் குறைநயப்பித்தற்குப் பல்லாற்றானு மாய்ந்த பாங்கி மெல்ல வெளிப்படுத்திக்கூற வாளாநின்ற தலைவியை முகம்புகுந்து அவளுட்கிடையை வெளிப்படுத்துவண்ணம் அறக்கழி வுடையனவற்றைக் கருதிக் கூறல்.

 வயமான் றுருவுநர் போலடுப் பார்நென்னல் வாயெனக்குக்
 கயமா மலரன்ன கண்ணாய் கருத்து நெகிழ்வித்தங்கே
 புயமார் தரவண்மிப் புல்லினர் வன்சொலிற் போக்கவின்றும்
 பயமார் பொழிலினர் காணுதி நீயும் பரிசடுத்தே.

(இ - ள்.) கயத்தின்கண்ணுள்ள பெரிய மலரையொத்த கண்ணினையுடைய தலைவியே. (ஒருவர்) தாமெய்த புலியினைத் தேடுபவர் போல நம்மை வந்தண்டுவார் நென்னற்பொழுதின்கண் என்னிடத்துத் தம்மெண்ணத்தை நெகிழவிட்டு (என்னை) தந்தோள்கள் பொருந்த நெருங்கித் தழுவுதல் செய்தனர். வன்சொற்களான் சேட்படுத்தக் கருதின் இன்றைப்பொழுதின் கண்ணும் (இன்பமுதலிய) பயனையளிக்கின்ற பொழிலின்கண்ணுள்ளனர் (யானேயன்றி நீயும் உன்குடிக்கேற்ற பெருந்) தன்மையோடு பொருந்திக் காணுவாயாக வென்றாளென்க.

(வி - ம்.) வயமான் - புலி. நென்னல் - நேற்று. கயம் - நீர்நிலை. பயம் - இன்பமுதலிய பிரயோசனம். பரிசு - தன்மை. "தலைவி தனக்குமறை புலப்படுத்தாது வருந்துகின்ற காலத்து அதனைத் தனக்குப் புலப்படுவித்துக்கொண்டே அவளை யாற்றுவித்தற் பொருட்டு அறக்கழிவுடையன கூறல். அறக்கழிவுடையனவாகா :- தலைவன் குறையுற்று நிற்கின்றவாற்றைத் தோழி தலைவிக்குக் கூறுங்கால் தன்னை அவன் நயந்ததுபோலவும். அவன் தன்னைப் புல்லினான் எனவும் பிறவுங் கூறல். இங்ஙனம் குற்றேவன்மகளாகிய தோழிகூறல் அறக்கழிவேயாயினும் அகப்பொருட்குப் பயனுடையதாய் வருதலின் அதனை