பக்கம் எண் :

1054தணிகைப் புராணம்

(வி - ம்.) தா - வலி. விரி - மிகுந்த.

(281)

இதுவுமது

அஃதாவது திருவானைக்காவின்கண்ணுள்ள வெண்ணாவற் றழையினை நீ கொணர்ந்தனையாதலின் அத்தழையை எமரொரு காலத்தும் அறியாரென்று கூறினாளன்றி வேறு தழை கொணரின் மறாளெனக் கருதி வேறு கொணர அதனையும் மறுத்தல்.

 உடம்பிடி யன்னகண் ணாளர சாளு மொலிமதுரைக்
 கடம்பணி பூந்தழை வீழ்வதொன் றானுங் கதிர்முடியோய்
 அடம்பணி செஞ்சடை யண்ணறன் பிள்ளைக் கணிபடுத்திட்
 டிடம்பட வைப்பதென் றத்தழை யென்று மிறுத்திலமே.

(இ - ள்.) பிரகாசம் பொருந்திய முடியையுடையவனே! வேற்படையையொத்த கண்ணையுடையாளாகிய தடாதகைப் பிராட்டியார் அரசு செலுத்துகின்ற பேரொலியையுடைய மதுரைக்கண்ணுள்ள கடம்பமரத்தினை யழகுசெய்கின்ற பொலிவுபெற்ற தழை (யாங்களல்குலிற் சேர்த்த) விரும்புவ தொன்றாயினும் அடப்பமலரினை யணிந்த செவ்விய சடையினையுடைய தலைவன் தன்பிள்ளையாகிய முருகனுக்கணியாகப் பொருந்தப் பூண்டுவைப்பதென்று கருதி அத்தெய்வத்தன்மையுடைய தழையைக் குறக்குடி மக்களாகிய யாங்கள் எக்காலத்தும் உடை முதலியனவாகத் தங்கச் செய்யோமாதலின் இத்தழையை ஏலோம் என மறுத்தா ளென்க.

(வி - ம்.) உடம்பிடி - வேல். வீழ்வது - விரும்புவது. அடம்பு - அடப்பங்கொடி : ஆகுபெயர். இடம்பட - அதிகமாக. இதனை "இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும்" என்னும் நாலடியானுணர்க. இறுத்தல் - தங்கச்செய்தல்.

(282)

இதுவுமது

அஃதாவது கடம்பந்தழை விரும்பத்தக்க தொன்றாயினும் இறைவன் தன் பிள்ளையாகிய முருகனுக்கணியாக நியமித்தலின் அத்தழையை இறுத்திலமெனக் கூறினாளன்றி வேறுதழை கொணரின் மறாதேற்ப ளெனக்கருதிக் கொணர அதனையும் மறுத்தல்.

 மந்தா நிலமுந் தமிழும் வளரு மலயவெற்பில்
 சந்தார் தழைகொண் டருளநின் றாய்தகை காலுரவோய்
 கந்தார் மணிப்புயத் தார்பலர் மார்புங் கலப்பதெனப்
 பந்தாடுஞ் செங்கையெம் பாவைதொ டாளந்தப் பாதவமே.

(இ - ள்.) தகுதியமைந்த அறிவன்றிண்மையுடையவனே! தென்றற்காலும் தமிழும் வளருகின்ற பொதியின் மலையின்கண்ணுள்ள சந்தன மரத்திற் பொருந்திய தழையால் அருள்செய்ய நின்றாய் பந்தினைப் பயில்கின்ற செவ்விய கையினையுடைய பதுமையையொத்த எந்தலைவி தூணினையொத்த அழகினையுடைய பல ஆடவர் மார்பிலெல்லாம் பொருந்துவதெனக் கருதி அம்மரத்தைக் கையாற்றொடுதலுஞ் செய்யாள். ஆகலின் நீ கொணர்ந்த இச்சந்தனத் தழையை ஏலேமெனக் கூறி மறுத்தாள்.