பக்கம் எண் :

களவுப் படலம்1055

(வி - ம்.) பாதவம் - மரம். வரைவின் மகளிர்போல ஆடவர் பலரானும் விரும்பப்பட்டு அவர்கள் மார்பிற் கலக்கும் பாதவத்தைப் பெற்றார்க்குரிய பொற்றொடி மகளாகிய எந்தலைவி தீண்டாளென்பாள் "எம்பாவை தொடாளந்தப் பாதவமே" என்றாள்.

(283)

இதுவுமது

அஃதாவது யாங் கொணர்ந்த சந்தனமரத்தின் றழையை யாங்கள் தீண்டுதலின்றென மறுத்தாளென்று கருதி வேறுதழை கொணர அதனையும் மறுத்தல்.

 அடுக்கத் தனிநலம் வீசுஞ் சுசீந்திரத் தண்ணலெதிர்க்
 கடுக்கைத் தழையுங் கடிமலர்ப் போதுங்கை கூப்பினல்லால்
 உடுக்கத் தகுவது மொண்முலைப் பூங்குழ லூடணியாத்
 தொடுக்கத் தகுவது மல்லகண் டாய்சுடர்ப் பூணவனே.

(இ - ள்.) சுடருகின்ற அணிகலன்களை யணிந்தவனே! அண்ம ஒப்பற்ற வீட்டினை நல்கும் சுசீந்திரமென்னுந் தலத்தின்கண் ணெழுந்தருளியிருக்கின்ற இறைவன் எதிரிலுள்ள கொன்றைத் தழைகளையும் வாசனையோடு விரியும் பருவத்தினையுடைய பேரரும்புகளையும் கை குவித்து யாங்கள் வணங்குவதல்லாமல் (உடையாக அல்குலில்) உடுத்திக்கொள்ளத் தகுதியானதும் ஒள்ளிய மார்பிடத்தும் பொலிவுற்ற கூந்தலின் இடையில் அணியாகத் தொடுத்துக் கொள்ளத்தக்கதும் அல்லனவாகும். ஆதலின் இக்கொன்றைத் தழையினையும் கண்ணியினையும் யாங்கள் ஏலேமென்றன ளென்க.

(வி - ம்.) அடுக்க - இறைவனைப் பொருந்த. நலம் - இன்பம். வீடு - சுசீந்திரம். கன்னியாகுமரியின் பக்கலிலுள்ளதோர் திருப்பதி.

(284)

இதுவுமது

அஃதாவது யாங்கொணர்ந்த கொன்றைத் தழையையுஞ் சூடத்தக்கனவல்ல வென்றாளன்றி ஏலேமென மறுத்திலளெனக் கருதி வேறு தழை கொணர அதனையும் மறுத்தல்.

 கற்பகத் தேந்தழை மேருவின் றென்சார்க் கலித்தெழுந்த
 பொற்பகத் தேய்க்கும் பொலங்கெழு நாவலம் பூந்தழையும்
 வெற்பகத் தேயெங்கண் மாதணிந் தால்விண் ணரமகளென்
 றற்பகத் தேதுமில் லாமலை வாழ்நர்க ளஞ்சுபவே.

(இ - ள்.) கற்பகத்தின் நாற்றத்தினையுடைய தழையும் மேருமலையின் றென்பால் தழைத்தெழுந்த அழகு தன்னிடத்தே பொருந்தும் பொன்னிறம் பொருந்திய நாவன்மரத்தின் பொலிவுபெற்ற தழையினையும் இம்மலையினிடத்து எங்கள் தலைவி அணியாக வணிவளாயின் அகத்திற் சிறிதுமன்பிலாத மலைவாழ்நர்களாகிய வேடர்கள் (இவளைத்) தேவுலகின்கண்ணுள்ள அரமகளென்று அஞ்சுவார்களாதலின் இவ்விரு தழையினையும் ஏலேமென மறுத்தா ளென்க.