பக்கம் எண் :

1056தணிகைப் புராணம்

(வி - ம்.) தேம் - நாற்றம். கலித்தல் - தழைத்தல். பொற்பு - அழகு. அகத்தே - உள்ளே. பொலன் - பொன். அற்பு - அன்பு. ஏதும் - சிறிதும்.

(285)

இதுவுமது

அஃதாவது யாங்கொணர்ந்த கற்பகத் தழையினையும் நாவலந்தழையினையும் அணியின் மலைவாழ்நர் அஞ்சுவார்களென ஏலேமென்றா ளாதலின் வேறுதழை கொணர்வேமெனக் கருதி வேறுதழை கொணர அதனையும் மறுத்தல்.

 ஊட்டிய தென்ன வொளிநிறப் பூந்தளி ரும்பருந்தாழ்
 கோட்டிய வேழச் சிலையான் குறித்து விடுங்கணையுள்
 வாட்டிய வெந்துயர் வாளிகொண் டீயு மரத்ததென்றால்
 தீட்டிய வண்புக ழோய்வஞ்சிக் கெங்ஙனஞ் சேர்ப்பதுவே.

(இ - ள்.) எல்லாத் திக்கினும் வரையப்பட்ட வளம்பொருந்திய புகழினையுடையாய்! நிறம் பிடித்தாலொத்த ஒளியோடுகூடிய நிறத்தினையுடைய பொலிவுபெற்ற (நீகொணர்ந்த) அசோகந்தளிர் மேலிடத்துள்ள தேவர்களுந் தாழ்வடைய வளைத்தல்செய்த கருப்பு வில்லானாகிய மாரன் கருதிவிடுங் கணைகளைந்தனுள் வைத்து வருத்தத்தக்க வெவ்விய துயரையுடைய கணையாகிய அசோகமலரைத் தன்பாற்கொண்டு (அவனுக்கு) கொடுக்கு மரத்தின்கணுள்ளது என்று பலருஞ்சொல்வர்களாதலின் (இதனை) வஞ்சிக்கொடி போல்பவளாகிய தலைவிக்கு யான் எவ்விதம் சேர்ப்பதாகும். ஆதலான் இவ்வசோகந்தளிரை யேலேம்
என்றாளென்க.

(வி - ம்.) ஒளிநிறப் பூந்தளிர் - அசோகந்தளிர். இதனை "ஊட்டியன்ன வொண்டளிர்ச்செயலை" என்னுங் கலியடியா னுணர்க. மன்மதபாணங்க ளைந்தனுள் உணவு நீக்கித் துயரீயும் கணையைக்கொண்டது அசோகாதலின் அதன்தழையும் துன்பந்தருமென்பார். "பூந்தளிர் எங்ஙனஞ் சேர்ப்பதென்றாள்" என்றார். தீட்டல் - எழுதல். மரத்தது - மரத்தின் கண்ணது.

(286)

இதுவுமது

அஃதாவது யாங்கொணர்ந்தது அசோகந்தழையென மறுத்தாளன்றி ஏற்றற் கைய மின்றென வேறு கொணர அதனையும் மறுத்தல்.

 நிரைக்கு மணிகுவ டோங்குந் தணிகை நெடுங்கிரியின்
 விரைக்கும் வியன்சுனைச் செங்கழு நீர்விண் ணகந்தனக்குந்
 தரைக்கு மடுப்பரி தான்ஞான சத்தி தரன்புயத்துக்
 குரைக்கும் வகையின்றி யேற்கும் வகையில்லை யுத்தமனே.

(இ - ள்.) தெய்வத்தன்மை பொருந்திய உத்தம குணங்களையுடையவனே! வரிசையாகவுள்ள அழகிய சிகரங்கள் உயர்ந்த தணிகையென்னும் நீண்ட மலையின்கண்ணுள்ள பெரிய சுனைக்கட்டோன்றிய நறுமண முள்ள செங்கழுநீர் பொன்னுலகுக்கும் மண்ணுலகத்தினுக்கும் பொருந்துவதரிதாகும். ஞானசத்தியாகிய வேற்படையைத் தரித்துள்ள முருகன் புயத்திலணியத் தகுமென்று சொல்லும் வகையல்லாமல்