பக்கம் எண் :

களவுப் படலம்1057

(நாங்கள் உடை முதலியனவாக) அணிதற்கு ஏற்றுக்கொள்ளும் முறையில்லை யென்றா ளென்க.

(வி - ம்.) ஞானசத்தி - வேற்படை. இவை எட்டிற்கும். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். முடியாதெனக் கருதுவாளாயின் இறந்துபடுமென்னும் அச்சமும் முடிக்கக்கருதலிற் பெருமிதமும் ஆயிற்று. பயன் : செவ்விபெறுதல்.

(287)

சேட்படுதலைவன் சேட்படைப் பாங்கி

கோட்படலின்றிக் கூடியநினைத்தல்

அஃதாவது யாங்கொணர்ந்த செங்கழுநீர்த்தழை விண்ணுலகினுக்கும் மண்ணுலகினுக்கும் பொருந்தாது அது முருகனுக்குரித்தேயன்றி யாங்கள் ஏற்கும்வகை யில்லையெனக் கூறிச் சேட்படுத்தினளாதலின் இவளறியாவண்ணம் முன்னர்க் கூட்டமுற்ற பொழிலிடைக் கூடுவா மென நினைத்தல்.

 அருளுந் திறத்தினள் போற்பசைத் தீஞ்சொ லறைவதல்லால்
 இருளுந் தொழுங்குழ லாட்ககத் தேபசை யேதுமில்லை
 மருளுந் தகநின் றினைவதி னாவதென் வன்னெஞ்சமே
 பொருளுந் துணையுமுன் புல்கியவேமப் பொழிலிடமே.

(இ - ள்.) வலியமனமே! நமக்கருள் செய்யும்வகையை யுடையாள் போல அன்புடன்கூடிய இனியசொல்லைச் சொல்வதல்லாமல் இருளும் (இத்தன்மையான கறுப்பு நமக்கில்லையேயென) வணங்குகின்ற கூந்தலினையுடையவளாகிய தோழிக்கு உள்ளத்தே அன்பு சிறிதுமில்லையாம். மயக்கமென்னும் பொருளும் தகுதியுடையதெனக் கண்டார் கருதும் வண்ணம் நின்று நான் வருந்துவதனாலுளதாவது யாது? ஆதலால் முன்னர் நாமவளைத் தழுவிய இன்பத்தினையுடைய பொழிலிடமே நமக்கு உறுதிப்பொருளும் துணையுமாகுமென்றா னென்க.

(வி - ம்.) பசை - அன்பு. ஏதும் - சிறிதும். மருள் - குணத்தைப் பொருளாகக்கூறிய வழுவமைதி. ஏமம் - இன்பம். பொருள் : உறுதிப்பொருள். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : ஆற்றாமை நீங்கல்.

(288)

குறிப்பறிபாங்கி மறைத்திடினென்னை

உள்ளியதரிதென வள்ளலைத்தழாஅல்

அஃதாவது இத்தோழி அறியாவண்ணம் கூடுவாமென நினைத்த தலைவன் குறிப்பினையறிந்த தோழி வேற்படையையுடைய தலைவனே தந்தையின் வயிற்றினின்று அன்னையின் பக்கலிற்றங்கிய கரு அவளுயிர்த்த காலத்தன்றி அவன் அக்கருவினைச்சேர்த லெவ்வாற்றானும் இன்று. அதுபோல மேகந்தங்கிய பொழிற்கண் முன்னையமணம் எனக்கு மறைப்பையாயின் கூடுதலி யாங்ஙனமெனத் தலைவனைத் தழுவிக் கோடல்.