| | தந்தை வயிற்றி னிருந்தன்னை பாங்கர்த் தவிர்ந்தகரு | | | அந்தி லுயிர்த்த வழியினல் லாலவன் மீட்டணைதல் | | | எந்த வழியினு மில்லைகண் டாயிலை வேற்கரவா | | | முந்தை மணமின்னுங் கூடுங்கொ லோமுகில் சூழ்பொழிற்கே. |
(இ - ள்.) இலைத்தொழிலமைந்த வேற்படையைத் தாங்கிய கையினையுடைய தலைவனே! தந்தை வயிற்றினிடத்து இருதிங்களிருந்து தாயின்மாட்டுப் பத்துத்திங்கள் தங்கிய கரு அவ்விடத்து உயிர்த்த காலத்தன்றி அத்தந்தை அக்கருவின்பக்கல் மீளச்சேர்தல் எவ்வாற்றானும் இயைதல் இல்லையாம். அதுபோல மேகங்கள் தங்கப்பெற்ற பொழிலிடத்து முன்னர் உன்னால் கூடப்பெற்ற கூட்டம் (என்னை மறைப்பையாயின்) முன்னர்ப்போல இப்பொழுதும் இயலுமோ இயலாதென்று கூறினாள். (வி - ம்.) தந்தை வயிற்றின் கருப்ப மிருதிங்களும், தாய் வயிற்றிற் பத்துத்திங்களும் தங்கியபின்னர் வெளிப்பட்டுத் தந்தைபாற் குழந்தை சேறலியல்பாகலின் "தந்தைவயிற்றி னிருந்தன்னை பாங்கர்த் தவிர்ந்த கரு, அந்திலுயிர்த்தவழியி னல்லாலவன் மீட்டணைதல்" என்றார். தந்தைபாற் கரு இருதிங்களும் தாய்பாற் பத்துத்திங்களுந் தவிர்தல் "பத்திருமாதங் கருவயினூறிய பாழுடம்பை, வைத்திரும் என்றார்" பிறரும். என்னைமறைப்பி னியலுமோ இயலாதென்றா ளென்பது குறிப்பெச்சம். கண்டாய் : முன்னிலையசை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுதல். (289) தளர்ந்தனை பெரிதெனத் தளர்வுநீக்கல் அஃதாவது முன்னர் உன்னால் கூடப்பெற்ற தலைவி என் காவலுக் கடங்கியிருப்பளாகலின் என் உடன்பாடின்றிக் கூடுதலரிதெனத் தழீஇக் கொண்ட தோழி கொல்லியம்பாவையைக் கண்ட ஆடவர் வண்ணம் வேறுபடுதல்போல வேறுபட்டு இரவின்கண் தாமரையலர் வாட்டமுற்றிருப்பது போன்று இருந்தனையெனக் கூறாநிற்றல். | | கொல்லி மருங்கெறுழ்ப் பூதம் புணர்த்த குவவுமுலை | | | வல்லி மருங்குலம் பாவைகண் டென்னவண் ணம்பிறிதாய் | | | எல்லி மருங்கிருந் தாமரை யென்னவி ருந்தனையால் | | | சொல்லி மருங்கக லாத்தொழில் வாய்ந்த துணர்க்கரனே. |
(இ - ள்.) நின்பெருமைக்கும் நிலைமைக்கும் சிறிது மியைபில்லாத இரப்புரைகள்கூறி, எங்கண்மாட்டு நின்று சிறிதுபொழுதும் நீங்காத தொழின்மை பொருந்திய பூங்கொத்தினையுடைய கையோடுகூடியவனே! கொல்லியம் பொருப்பின்கண் வல்லியோடுகூடிய பூதங்களான் நிறுவிய குவிந்த தனங்களையுடைய வல்லிக்கொடிபோன்ற மருங்குலையுடைய பாவையைக்கண்ட ஆடவர்போல வண்ணம் வேறுபட்டு இராக்காலத்துத் தாமரை வாடியிருப்பதுபோல வாட்டமுற்றிருந்தனை யென்க. (வி - ம்.) நின்குறையை எங்கட் கறிவித்து எங்கண்மாட்டுச் சிறிதுபோது நீங்காது தழையோடுகூடிய கையுடன் நின்றாயென்பாள் "சொல்லி மருங்கக லாத்தளிர் வாய்ந்த துணர்க்கரனே" என்றாள். |