பக்கம் எண் :

களவுப் படலம்1059

கொல்லிமலையின்கண் பூதத்தான் நிறுவியபாவை யென்க. அப்பாவை யைக்கண்ட ஆடவர்வண்ணம் வேறுபடுவர் என்பதுபோன்ற வண்ணம் பிறிதா" யென்றார். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்கல்.                                            

(290)

அன்புற்ற தோழி யசதியாடல்

அஃதாவது என்னைமறைப்பின் நீருள்ளிய தரிதெனத் தழீஇக் கண்ட தோழி இம்மலையிடத்து இத்தலைவன் கை தழையைக் கொண்டது. உரை ஒப்பற்ற வேட்டையாடுதலைக் கொண்டது. உள்ளமானது கரும்பு வில்லைக்கொண்ட மன்மதனது மலர்ப்பாணத்தைக் கொண்டது. ஆதலாற் சொல்லோடு செயல் வேறுபடுதலின் இவர்க்கு நிகராவரொருவரு மின்றெனக் கூறாநிற்றல்.

 தழைகொண்ட தங்கை யுரைகொண்ட தாற்றனி வேட்டையுளம்
 கழைகொண்ட வார்சிலைக் காமரு வேளைங் கணைகொண்டதால்
 பிழைகொண்ட நெஞ்சம் பிணைந்தறி யாப்பெருமான் களம்போல்
 மழைகொண்ட சாரல் வரைவாய் நிகரில்லை மன்னவற்கே.

(இ - ள்.) ஆணவமலமாகிய பிழையினை இயல்பாகக்கொண்ட உள்ளமானது மாறுபடுதலான் அறியாத பெருமையையுடைய இறைவன் றிருக்களம்போன்ற மேகத்தைத் தன்னிடத்துக்கொண்ட பக்கங்களோடு கூடியமலையிடத்து இத்தலைவர் அழகிய கைகள் தழையினைக் கொண்டுள்ளன. ஒப்பற்ற வேட்டமாடுந் தொழிலினைச் சொற்கொள்ளா நின்றது. கரும்பாலாகிய நீண்ட வில்லினையுடைய கண்டார்க்கு விருப்பஞ்செய்கின்ற காமனது ஐந்து கணைகளை உள்ளங்கொண்டது. ஆதலாற் சொல்லோடு செயல்மாறுபடுதலின் இத்தலைவற்கு நிகராவர். பிறர் ஒருவருமில்லை யென்க.

(வி - ம்.) பிணைந்து - மாறுபட்டு. மலையைப் பெருமானாகவும் களத்தை மேகமாகவும் கொள்கவென்பார், "பெருமான்களம் போன்மழைகொண்ட சாரல்வரைவாய்" என்றார். சொல்லோடுசெயல் வேறுபடுதலின் மன்னவற்கு நிகரில்லையென விழித்துக் கூறினார். அசதி - பரிகாசம் : சிரித்துப்பேசல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இகழ்ந்து கூறல்.                                                                             

(291)

இன்னகைகண்ட மன்னனுறுத்தல்

அஃதாவது தலைவன், தோழியின்மாட்டு அசதியாடல் நிகழ்தலைக் கண்ணுற்றுத் தன்னுள்ளே இடித்தலைச்செய்து, மின்னலை வெளியிட்ட மேகம் துளியைச்சிந்தி மண்ணினைக் காத்தல்போல என்மாட்டுக் குற்றந் தீர்ந்த சொற்களைச் சொல்லிப் புன்னகை செய்த தோழி நெஞ்சமே நாம் கூறிய குறையை முடித்துத்தருதற் கையமின்றென்று கூறாநிற்றல்.

 இடித்துத் தடித்து வழங்கிய நீல வெழிலிமழை
 பொடித்துத் தரணி புரப்பதன் றோபுரை தீர்கிளவி
 நொடித்துத் தரள நகையெழில் காட்டி நுவல்குறையை
 முடித்துத் தருவதற் கையமுண் டோவென் முனிநெஞ்சமே.