பக்கம் எண் :

களவுப் படலம்1071

இவண் கழிப்பி நாளை நின்னூர்க்குச் செல்வாயாகவென உலகியல் கூறுவாள்போன்று வரைவு பயப்பக் கூறாநிற்றல்.

 தொண்டக மேங்கப் புதுவோர் துவன்றத்தொன் மாண்பொய்கைவாய்
 முண்டக மேந்து முருகன்கொண் டாடு முதுவிழவு
 கண்டக மோகை மலர விரவு கழிப்பிச்சென்மோ
 வண்டக மார்க்குங் குழலாட் குயிரன்ன மன்னவனே.

(இ - ள்.) வண்டினங்கள் உள்ளே முழங்குதல்செய்யும் குழலினை யுடைய எம் தலைவிக்குயிரை யொத்த தலைவனே! குறிஞ்சிநிலப்பறை யொலிக்க இவ்விழவினைக் காணப் புதிதாக வந்தவர்கள் நெருங்கப் பழைமையாகிய மாட்சிமையுற்ற பொய்கையினிடத்துத் தாமரைமலர்களாற் றாங்குதலுற்ற முருகப்பெருமானை முழுமுதற் கடவுளெனக் கொண்டாடப்பெறுகின்ற விழவினைப் பார்த்து அகத்தின்கண்ணே ஓகையதிகரிக்க இற்றை இராப்பொழுதை யெம்மூரிடத்தே கழிப்பி நாளை நின்னூர்க்குச் செல்வாயென உலகியல் கூறினாளென்க.

(வி - ம்.) பிள்ளையார் சரவணப் பொய்கையிற் பதுமமலரிற் றோன்றினாரென்பார் "தொன்மாண்பொய்கை முண்டகமேந்துமுருகன்" என்றார். தொண்டகம் - குறிஞ்சிப்பறை. துவன்றல் - நெருங்கல். மோ : முன்னிலையசை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறிப்பினாற் பிரிவாற்றாமை கூறி வரைவு கடாதல்.

(310)

 வந்த கிழவனை மாயஞ் செப்பிப்
 பொறுத்த காரணங் குறித்தவள் கூறல்

அஃதாவது உலகியல் கூறுவாள்போன்று முட்டைகளை வயிற்றினடக்கி மயில்கள் அவயங்காக்கும் மலர்ந்த மலர்களையுடைய பொழிலோடுகூடிய குன்றக நாட்டின்கண் நின்பால் நீங்காத வன்பினைக் கொண்ட இத்தலைவியின் வேறுபாட்டிற்குக் காரணம் யாதெனத் தாய் குறுகிப் பார்ப்பாளாயின் நின்பெருமை யாவும் மாறுபடுமெனக் கூறா நிற்றல்.

 அண்ட மகட்டி னடக்கிமென் றோகை யடைகிடக்கும்
 விண்ட மலர்ப்பொழிற் குன்றக நாட்டுவிள் ளாதவன்பு
 கொண்ட விவர்வண்ணம் யாதென வோர்நாட் குறுகிவினாய்க்
 கண்டரிற் கோடுங்கொ லோநின் பெருமையெங் காவலனே.

(இ - ள்.) எங்களுயிரைக் காத்தற் றொழிலை மேற்கொண்ட தலைவனே! தாமீன்ற முட்டைகளைத் தம் வயிற்றகத்தே யடக்கி மயிலினங்களவயங்காக்கும் விரிந்த மலர்களையுடைய பொழிலுடன்கூடிய மலைகளைத் தன்னகத்தே கொண்ட நாட்டின்கண் (நின்பால் நீங்காத) அன்பினைக்கொண்ட இத்தலைவியார் நிறம் (இங்ஙனம் வேறுபடுதற்குக் காரணம்) என்னவென்று வினாவி ஒருகாலைத் தாய் அணுகிப் பார்ப்பின் நின்பெருமை மாறுபடுமாதலின் வரைந்து செல்வாயென்க.

(வி - ம்.) தோகைகள் தாமீன்ற முட்டைகளைப் பிறரறியா வண்ணம் அகத்தடக்கி அவயங்காக்கின்ற நாடு எனவே தலைவனே