பக்கம் எண் :

1072தணிகைப் புராணம்

நின்னுடன் கூடிய களவொழுக்கினைத் தாய், தன்னையர், ஆயவெள்ளத்தார் முதலியோரறியாவண்ணம் அடக்கி வைத்துளள். இனித் தாய் வந்துபார்ப்பின் களவு வெளிப்படும். வெளிப்படின் பெருநாணினளாதலின் தலைவி இறந்துபடுவள். ஆதலால் வரைந்து செல்வாயென வுள்ளுறை யெய்திக்கிடந்தமை காண்க. கண்தரின் - பார்ப்பின். இவர் என்றது தலைவியை. மெய்ப்பாடு : அச்சம். இவ்வொழுக்கம் புறத்தவரறியின் இவளிறந்துபடும் இறந்துபட இவனும் இறந்துபடும் என்னும் நினைவினளாதலால். பயன் : வரைவு கடாதல்.

(311)

நுணங்கிடைப் பாங்கி வணங்கிக்கூறல்

அஃதாவது உலகியல் கூறுவாள்போன்று வரைவு பயப்பக் கூறிய தோழி புகழோய்! மறவாது நின்று அன்பையும் எண்ணத்தையும் உளவாக்கிய நீ எம்மையல்லாமல் நின்பிரிவால் கண்ணினையும் வளைவீழ்கின்ற கையினையும் காத்தருள்வாயென்று வரைவு பயக்கக் கூறா நிற்றல்.

 பண்ணையு மேனலங் காவலும் பாற்றியெம் பாங்கரன்பும்
 எண்ணையு மாக்கிய நீயெம்மை யன்றி யிரும்புனல்கால்
 கண்ணையும் வால்வளை வீழ்தளிர்க் கையையுங் காத்தருளாய்
 மண்ணையும் வானையுஞ் சூழ்புக ழோய்மற வாதுநின்றே.

(இ - ள்.) மண்ணுலகும் விண்ணுலகும் இடஞ்சிறிதாகப் பரந்த புகழினையுடைய இறைவனே! மறவாமல் நின்று விளையாட்டினையும் தினைகாத்தற்றொழிலினையும் நீக்கி எங்களிடத்தன்பினையும் எண்ணத்தையும் உளவாக்கிய நீ எங்களைப் பாதுகாத்தலேயன்றி (நின்பிரிவால்) மிக்க புனலைக்காலுகின்ற கண்ணினையும் வெள்ளிய சங்குவளையல் உகுகின்ற தளிரினையொத்த கைகளையும் காப்பாயாக வென்க.

(வி - ம்.) பண்ணை - விளையாட்டு. பாற்றி - நீக்கி. எங்கண் மாட்டு அன்புற்று நின் எண்ணத்தை யாங்கள் பயிலுதற்கிடமாகச் செய்தாய் என்பாள் "எம்பாங் கரன்பும், என்னையுமாக்கிய நீ" என்றாள். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவு பயப்பக்கூறல்.

(312)

வீங்குதோட் டலைவி வேளா ணெதிர்தல்

அஃதாவது தோழி தலைவனையடைந்து உலகியல் நிலையால் வரைவு பயப்பக் கூறியதை யறிந்த தலைவி முதலும் நடுவுமிறுதியுமாதலன்றி எல்லாப் பொருளாயுமிருக்கும் வீராட்டகாசத்தின்கண்ணுள்ள இறைவாழ்த்துநர் குணங்களா னிறைந்தமைந்திருத்தல்போலத் துன்னுவா யெனப் புள்ளினையும் விலங்கினையும் கூவுகின்ற நம்புனமானது விருந்தினரைப் புறந்தருநீர்மையா னமைந்தன. நாமும் விருந்தினரை யெதிர்தல் தகுதியெனக் கூறாநிற்றல்.

 முன்னா யிறுதியு மாய்நடு வாய்முழு தாயெவர்க்கும்
 மன்னாய் வயங்கிய வீராட்ட காசனை வாழ்த்துநர்போல்
 அன்னாய் விருந்து புறந்தரு நீர்மையி னான்றனவால்
 துன்னா யெனப்புள் விலங்கினைக் கூவுநஞ் சூழ்புனமே.