பக்கம் எண் :

களவுப் படலம்1073

(இ - ள்.) தான் பயிருடைமையான் ஈண்டுப் பொருந்துவாயாக வென்று புள்ளினையும் விலங்கினையும் கூவியழைக்கின்ற நமது வேலியாற் சுற்றப்பட்ட தினைப்புனமானது யாவர்க்கும் முன்னாயும் இறுதியுமாய் நடுவுமாகி எல்லாப் பொருளுந்தானாகியும் விளங்குகின்ற வீராட்ட காசத்தின்கண்ணுள்ள இறைவனை வாழ்த்துதல் செய்கின்ற மெய்யடியார்கள் குணங்களா னான்றமைந்திருத்தல்போல புதிதாய் வந்தவரைப் புறந்தருகின்ற தன்மையோடு அமைந்தனவாதலான் நாமும் விருந்தினரைப் புறந்தருதல் முறையாகு மென்றனள்.

(வி - ம்.) தினைமுற்றிய காலத்துப் புள்ளினையும் விலங்கினையும் அணுகாவண்ணம் அகற்றிநம்புனம் தினைபயிராயிருத்தலின் அவைகளை ஈண்டுப் பொருந்துவாயாகவென அழைக்குமென்பார், "துன்னாயெனப் புள் விலங்கினைக்கூவு நஞ்சூழ்புனம்" என்றனர். இறைவனை வாழ்த்து மெய்யடியார்கள் குணங்களானான்றமைந்திருத்தல்போலப் புனமும் விருந்தினரைப் புறந்தரும் நீர்மையாலுயர்ந்தன வென்பார் "விருந்து புறந்தரு நீர்மையிலான்றனவால்" என்றார். விலங்கினையும் புள்ளினையும் துன்னற்கவெனக் கூறும் அறிவிலவாகிய புனமும் இக்குணங்களா னான்றியிருப்பதால் நாமுந் தலைவனை யெதிர்ந்து அவர்க்கு வேண்டுவன செய்ய வேண்டுமென்பது குறிப்பெச்சம்.வேளாண் - உபகாரம் : கொடை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் வேளாண் எதிரும்விருப்பம். தலைவி தன்தோழியை நோக்கிக் கூறல். தலைவிகூற்று. கேட்போர் தோழி.

(313)

குறிப்பறி பாங்கி கொற்றவற் குணர்த்தல்

அஃதாவது தலைவியின்வேளா ணெதிருங்குறிப்பினை யுணர்ந்த தோழி தலைவனே! பகற்காலத்திற் பலநாளும் பெயர்கின்றாய். பகையாகிய மாலைக்காலம் வந்தது. துன்பினை நீக்காயாயின் யாதாய்நேரும் யாமறியோம். பாகனும் நீங்குக. தலைவனே தகுதியாகிய ஊணினைத் தருவோம். வாழ்வாயாகவெனக் கூறாநிற்றல்.

 பகல்வந்து பன்னாட் பெயர்தி பருவரு மாலையெனும்
 இகல்வந்த தின்னாங் கொழியா யெனினெவ னோவெவரும்
 புகல்வந்த தேர்த்தொழில் பாகனுந் தீர்கநின் போக்கொழிக
 தகல்வந்த வூணனி நல்குகம் வாழி தனிவள்ளலே.

(இ - ள்.) ஒப்பற்ற வள்ளற்றன்மையை யுடையவனே! பன்னாளும் பகற்காலத்தே வந்து பெயர்கின்றாய். துன்பினைத் தருகின்ற மாலைக்கால மென்று சொல்கின்ற பகையானது வராநின்றது. அதனாலுளவாந் துன்பினை நீக்காயாயின் யாதாய்முடியுமோ, எத்தன்மையுடையாரும் புகழ்ந்து புகலுதற்கமைந்த தேரினைக் கடாவுகின்ற பாகனுமத்தொழிலை யொருவுக. நினது செலவினையுந் தவிர்வாயாக. அங்ஙனஞ் செய்யின் தகுதியாக வந்த உணவினை யாம் விருந்தாகத் தருவோம் என்றாளென்க.

(வி - ம்.) மாலையென்னும் பகை எங்களைத் துன்பஞ்செய்யத் தோன்றியது. அதனாலுளவாந் துன்பினை நீக்காயாயின் யாதாய் முடியுமோ வென்க. யாவருஞ் சிறந்தவனென்று புகலுதற்கேதுவாக