பக்கம் எண் :

1078தணிகைப் புராணம்

நோக்கி வாணுதலாய் மணத்தலின்றிச் செல்லும் பகற்காலத்தைக் காணாதவர் நம்மைப் பிணமாந்தன்மை யுடையராகச் செய்தனர். ஆதலின் நாம் மறத்தலின்றி யாமெங்ஙன நினைப்பா மெனக் கூறாநிற்றல்.

 கணமன்றிக் கைத்தவர் மாட்டுங் கறாத கருங்கழலார்
 குணமன்றிக் குற்றங்க ணாடாக் குணப்பெருங் குன்றமன்னார்
 மணமன்றிச் செல்பகல் காணா தவரின்று வாணுதலாய்
 பிணமன்றிச் செய்திலர் நம்மையெவ் வாறுளம் பேணுவதே.

(இ - ள்.) இந்நாள் ஒளிபொருந்திய நுதலினையுடையாய் தம்மை வெறுத்தவராகிய பகைவரிடத்தும் ஒருகணப்பொழுதன்றிச் சினங்கொள்ளாத பெருமைபொருந்திய கழலினையுடைய தலைவர் தந்நாட்டார் மாட்டுள்ள நற்குணங்களையன்றிக் குற்றமுளதாயினும் அவற்றை யொருபொருளாக ஆராயாத பெரிய குணங்களையுடைய தலைவர் மணமல்லாமற் செல்கின்ற பகற்பொழுதை யறியாராய் இருந்தும் நம்மைப் பிணமாகவே செய்தனர். அவரை நாம் உளத்தால் விரும்புவ தெங்ஙனங் கூடுமென்றா ளென்க.

(வி - ம்.) கறாத - கோபிக்காத. "கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தா னுணர்க. நாடொறு மணக்கோலத்துடனியைபவ ரென்பார். "மணமின்றிச் செல்பகல் காணாதவர்" என்றார். அத்தன்மையராயினும் நம்மைப் பிணமாகவே செய்தன ரென்பார். "பிணமன்றிச் செய்திலர்நம்மை" யென்றனர். பிறர்மாட்டுளவாம் குணமன்றிக் குற்றங்களை நாடாப் பெருங்குணமுடையா ரென்பார். "குற்றங்கணாடாக் குணப்பெருங் குன்றமன்னார்" என்றனர். இனி மணமின்றி என்பதற்கு என்னொடு மணத்தலின்றி யெனப் பொருள் கொள்வாருமுளர். அயர்த்தல் - மறத்தல். மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : அயர்த்தல்.

(321)

 பறைந்தஞர் விளியச் சிறந்தவனடுப்ப
 நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல்

அஃதாவது அருமைசெய் தயர்த்த தலைவி துன்பங்கெட்டு நீங்கக் காதன்மிகுதியால் தலைவனுக்கு எதிர்மொழி கொடாது என்னொடுடன்பட்டிருந்து வாக்கும் குறைபட்டது. இறைவனை அன்று காட்டிய கண்கள் நினக்கிது தகாதோவென நீரைச் சிந்தி நிகழ்த்தினவெனக் கூறாநிற்றல்.

 தனக்கே தகுதி யிருந்துந் தளர்வினைச் சாற்றல்செல்லா
 தெனக்கே யுடன்பட் டெழுந்தநல் வாக்கிறை யோனையன்று
 மனக்கே விடலருங் கேண்மையிற் காட்டிய மாமழைக்கண்
 நினக்கே தகுங்கொ லெனநீர் விடுத்து நிகழ்த்தினவே.

(இ - ள்.) காட்சிக்கண் எனக்குடன்பட்டெழுந்த நல்லவாக்கு என் குறையைத் தலைவருக்குக் கூறுந்தன்மை தனக்கியல்பினமையப் பெற்றும் என் துன்பினைச் சொல்லமாட்டாது. இஃதொரு தீவினை இருந்தவாறென்னே! அஞ்ஞான்று தலைவனை மனத்திடத்தினின்றும்