பக்கம் எண் :

களவுப் படலம்1079

நீக்குதற் கருமையாகிய நட்பினுடன் காட்டிய பெரிய குளிர்ந்தகண்கள் (தலைவனே நீ தலைவியை நீங்கியிருத்தல் நினக்கு) தகுதியோவென்று நீரைச்சிந்தி என்றுன்பினை யவருக்கு நிகழ்த்தின வென்க.

(வி - ம்.) அன்புடை இருவர் பிரிந்துகூடிய ஞான்று துன்புற்றழுதல் காதலின் இயற்கையாதலின் நிறைந்த காதலுடைமையை விளக்கிய "நீர்விடுத்து நிகழ்த்தினவே" என்றனர். தன் குறையைப் பிறர்க்கு அறிவிக்குஞ் சிறந்த கருவி வாக்காக, வருந்தும் அது தன் குறையைத் தலைவற்கெடுத்து வலியுறுத்தும் ஆற்ற லிலதாயிற் றென்பார். "நல்லவாக்கு தனக்கே தகுதியிருந்தும் தளர்வினைச் சாற்றல் செல்லாது" என்றனர். இதனாற் சொல்லெதிர் மழுங்கல் என்னும் கொளுவின்பொருளும் நிலைபெறுதல் காண்க. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : சொல்லெதிர் மழுங்கல்.

(322)

முன்னா ளிழுக்கின் மின்னிழை மெலிதல்

அஃதாவது தலைவனை யெதிர்ப்பட்ட காலத்துச் சொல்லெதிர் மழுங்கிய தலைவி தலைவன் கூறிய உறுதிமொழியின் இழுக்கிய காலத்து யான் அவனைத் தழுவி வாங்கிக் கூடுதற்கு முன்னரே பசப்பானது விளங்கா நின்றது. நீங்காத நீர்மையைக் கெடுத்து (இந்நாள்) பிரிவைக் கொடுத்த வேற்படையுடையான் மார்பின்கட் சென்று முன்னாள் வருந்திய அரிய உயிரை எவ்வாறு தாங்குவே னெனக் கூறாநிற்றல்.

 முயங்கிய கைகளை வாங்கிப் புணருமுன் னேபசப்புத்
 தயங்குவ தாற்றண வாப்பெரு நீர்மை தகைத்தளித்த
 வயங்கிய வைநுதி வேலோன் மருமம் படர்ந்துமுன்னாள்
 உயங்கிய வாருயி ரெவ்வாறு தாங்குது மொண்புவிக்கே.

(இ - ள்.) ஒளிபொருந்திய பூமியின்கண் (யான் தலைவரைத்) தழுவிய கைகளை எடுத்துப் பின்னரவரைக் கூடுதற்கு முன்னரே பசத்தற் குணம் என்மாட்டு விளங்கா நிற்கும். (என்னை) நீங்காத பெரிய தன்மையைக் கெடுத்து (இந்நாள்) பிரிதலை எனக்குக் கொடுத்த விளக்கமுற்ற கூர்மைபொருந்திய வேற்படையை யுடையான் மருமத்தின் கண்ணே சென்று முன்னாள் வருந்திய அரியவுயிரினை யான் எவ்வாறு தாங்குவே னென்றா ளென்க.

(வி - ம்.) தகைத்து அளித்த வேலோன் என இயைக்க. அவன் மார்பின்கண்ணே முன்னாட்படர்ந்து இந்நாளுயங்கிய உயிரைப் புவியின் கண் தாங்குவே னென்பாள். "உயங்கியவாருயிர் எவ்வாறு தாங்குது மொண்புவிக்கே" என்றாள். தகைத்து - கெடுத்து. பசப்பு - பசலை நிறம். மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : மெலிதல்.

(323)

மையலிற் பெயர்வோன் கையுறை மறுத்தல்

அஃதாவது முன்னர்க்கூறிய சொல்லினிழுக்கிய தலைவன் பிரிவான் மெலிந்த தலைவிக்கு நீ தருந்தழை காமநோய் நீக்குமருந்தாய்ப் பொருந்துவதெனினும் நீ கூடிப்பிரிகின்றதுபோல நீ கொடுக்கும் தழையும் எங்கள்பாற் பொருந்திப் பின்னர் வாடி நீங்குந்தன்மை யுடையதெனக் கூறாநிற்றல்.