பக்கம் எண் :

களவுப் படலம்1081

அச்சம் பயிர்ப்பு முதலிய குணங்களோடு கூடிய பெண்டன்மையின் மாறுபாடு என்மாட்டுச் சிறிதும் நிகழ்ந்ததில்லை யென்க.

(வி - ம்.) தலைவனாற்றிய எண்வகைச் செயல்களாவன : மெய்தொட்டுப் பயிறல், பொய்பாராட்டல், இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல். நீடுநினைந்திரங்கல், கூடுதலுறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி (பெறுதல்) தீராத்தேற்றம் என்பன. இவையெட்டும் படர்க்கை யொருமைக்கண் வந்த செய்யும் என்னும் முற்றாதலான், நீவுவான், சொல்லுவான் என்றே பொருள் கொள்க. தலைவன் அங்ஙனஞ் செய்யினும் என் பெண்டன்மையிற் சிறிது மாறுபாடு நிகழவில்லை யென்பாள். "பெண்மையிற் கோணுதல் யாது நிகழ்ந்தின்று" என்றாள். பெண்மையாவது நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலியன உடைமை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தோழிக் கியம்பி யின்புறல்.

(325)

வரிவளைத் தோழி வரைவு கடாதல்

அஃதாவது தலைவனாற்றிய எண்வகைச் செயலையும் கேட்ட தோழி தலைவனை நோக்கிக் குட்டிகளோடு குரக்கினங்கள் தாவியெழுந்து சோலையினும், குன்றின்மாட்டும், பாய்கின்ற மலைகளையுடையவனே! வரையாது விடுவையாயின் நின்னிறை வழுவல் பொருந்தும். ஆதலால் வரைந்து செல்வாயாக வெனக்
கூறாநிற்றல்.

 தழுவிய மென்பற ழோடு குரக்கினந் தாயெழுந்து
 குழுவியல் சோலையுங் குன்றினும் பாயுங் குலச்சிலம்பா
 கழுவிய மாமணி போனிறை காரிகை யாண்மடந்தை
 வழுவிய லாநிற்கு மாலினி நீவரை யாதுறினே.

(இ - ள்.) தன் வயிற்றினிடத்துத் தழுவிய குட்டிகளோடு குரக்குக் கூட்டங்கள் குழுமிய சோலையினும் குன்றுகளினும் பாய்ந்து செல்கின்ற சிறந்த மலையினையுடையானே! மண்ணிய மணிபோன்று நிறைகின்ற அழகினை யாள்பவளாகிய தலைவியை இனி வரையாது செல்வையாயின் நின்மாட்டு (நிறை) வழுவல் பொருந்தாநிற்கும் என்றன ளென்க.

(வி - ம்.) நின்னை விரும்பிய இவளை ஈன்றோர் வேறோர் தலைவனுக்குக் கொடுப்பினுங் கொடுப்பர். அவளுக்கு நிறைவழுவுதல் பொருந்து மென்பார். "மடந்தை, வழுவியலாநிற்கும்" என்றனர். நினக்கு நிறைவழுவுதல் பொருந்துதலன்றி இவட்கும் நிறைவழுவல் பொருந்துமெனக் கொள்க. இயலல் - பொருந்துதல். நின்னாட்டிலுள்ள குரக்கினம் தம் குட்டிகளோடு சோலையினும் குன்றினும் தாவிச் செல்லும் குலச்சிலம்பை யுடையை யாதலின் நீயும் தலைவியை மணந்து குழவியைப் பயந்து தலைவியினுடனியலுவாய் என்னு முள்ளுறை கொள்ளக் கிடந்தமையுங் காண்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.

(326)

வரைவுடன் படாது மன்னவன் கிளத்தல்

அஃதாவது வரைவுகடாய தோழியினை நோக்கிப் பலாக்கனி தாழையில் வீழ்ந்திருப்பினும் மந்திகள் தாழைக்கனியென்று கருதாத