பக்கம் எண் :

1082தணிகைப் புராணம்

மலையின்கண் வந்து தேவர்கள் இவள் தேவருலகிற் பிறந்தவளே என்று தருக்குக்கொள்ள விளங்காநின்ற அணங்கினையா என்னை வரைந்து கொள்ளச் சொல்கின்றாயென வரைவுடன்படாது மறுத்துக் கூறாநிற்றல்.

 வருக்கைக் கனியற்று வார்நீர் மருங்கெழுந் தாழையில்வீழ்ந்
 திருக்கக் கனியிளந் தாழைய தென்றிள மந்தியெண்ணாத்
 துருக்கக் கிரிவயின் வந்திருந் தேவர்தொன் மாண்குலங்கள்
 தருக்கக் கிளரு மணங்கினை யோவிது சாற்றுவதே.

(இ - ள்.) வருக்கையென்னும் ஒருவகைப் பலாப்பழங்கள் ஒழுகுகின்ற நீர்நிலையின் பக்கத்தே தோன்றுகின்ற தாழை மரங்களில் வீழ்ந்திருக்க இக்கனி இளந்தாழை மரங்களின் கனியென்று இளங் குரக்கினங்கள் கருதாத துருக்கங்களையுடைய மலைகளிடத்து வந்து பெரிய பழைமையுடைய மாட்சிமையுற்ற தேவ சாதிகள் (புல்லிய வேடர்குடிக்கண் இவள் தோன்றினும் இவள் தெய்வப் பெண்ணேயென) தருக்குக்கொள்ள விளங்கா நிற்கும் இத்தெய்வப் பெண்ணையா இழிந்த வேடனாகிய என்னை மணந்து கொள்ளச் சொல்வது என்றானென்க.

(வி - ம்.) துருக்கம் - மலைமேலியற்றிய கோட்டை, கிரிவயின் வந்து கிளருமணங் கென்க. வருக்கைக்கனி பதனழிந்து தாழைமரத்தில் வீழ்ந்திருப்பினும் மந்திகள் வருக்கைக் கனியென்றே நினைக்கும் மலையாதலான் தேவர்களெல்லாம் இவள் புல்லிய வேடர்குடிக்கண்ணே ஒரு காரணமாக வயத்தாற்றோன்றினும் இவள் தெய்வப்பெண்ணேயெனத் தருக்குக்கொள்ளத் தோன்றுமணங் கென்பான். "தேவர்கள் தொன்மாண் குலங்கள் தருக்கிக் கிளருமணங்கினையோ" என்றான். அணங்கினையோ ஓகாரம் வினா : இது - வரைந்துகொள்ளலாகிய இது. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : தலைமகன் விருப்புணர்த்தல்.

(327)

மறுத்தல் தகாதென வரைவு கடாதல்

அஃதாவது வரைவுடன்படாது மறுத்துக் கூறிய தன்மகனுக்குத் தோழி பூவினையணிந்த தலைவியின் அன்பினை யகத்தே யுடையவனே, தேவர்களும் காதலிக்கும் சோலையின்கண்ணுள்ள அகிலையும் சந்தனத்தையும் மேற்கொண்டுயர்ந்த மலையின்கண்ணுள்ளவர் எம்மவர்கள் இத்தலைவி புனங்காத்தலையும் நீ நன்கறிவாய். ஆதலான் யாங்களும் வேடர்களே நீ மறுத்தற்குக் காரண மென்னோவெனக் கூறாநிற்றல்.

 கற்பகச் சோலை யுடையோர் களுநனி காதலிக்கும்
 பொற்பகச் சோலை யகினறுஞ் சந்தனம் பூண்டுயர்ந்த
 வெற்பகச் சூழலின் வாழ்ந ரெமர்விரைப் பூங்குழலாள்
 அற்பகச் சூழ்ச்சியி னாய்புனங் காவ லறிந்தனையே.

(இ - ள்.) நறுமணமுள்ள பூக்களை யணிந்த குழலினையுடை தலைவியின் அன்பைத் தன்னகத்தேகொண்ட ஆராய்ச்சியினை யுடையயாய் கற்பகப் பூஞ்சோலையினையுடைய தேவர்களும் மிகவும் விரும்பும் அழகினைத் தன்னகத்தேயுடைய அகின்மரங்களையும் சந்தனமரங்களையும்