| நீறளித்தே" யென்றனள். அன்னை இன்று நீறளித்துச் சென்றனள். நாளை இற்செறிப்பாள் இற்செறித்தலை யறிந்த தந்தை தன்னையர் இவள் முதுக்குறைவுகண்டு வேறொரு தலைவனுக்கு வரைந்து கொடுப்பதற்குமுன் நீ வரைந்துகொள் ளென்பாள். "ஆய்ந்து..... நீறளித்தாள்" என்றாள். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செறிப்பறிவுறுத்து வரைவுகடாதல். (329) கிழத்தி யறிவுரைஇ வரைவு கடாதல் அஃதாவது வரைவினை எம்மவர் ஆராய்வரெனக் கூறிய தோழி பளிக்குரலின் நெல்லையிட்டு யானைக்கொம்பாகிய உலக்கை பிடித்துத் தேன்றுளிக்குங் கூந்தலினை யுடையார் உலக்கைப்பாட்டான் குற்றுதல் செய்கின்ற மலையையுடைய நாடனே மீன்போல் நோக்கினையுடைய தலைவியின் உள்ளத்தை மணத்துடனே வந்து அளித்தாலல்லாமல் அவள் களித்தலின்றாமெனக் கூறாநிற்றல். | | பளிக்குரல் வேய்நெற் படுத்திபக் கோடுபற் றிச்செழுந்தேன் | | | துளிக்குமென் கூந்தலர் வள்ளையி னோச்சுமை சூழ்சிலம்பா | | | களிக்கய னோக்கி தெருமர லுள்ளங் கடியுடன்வந் | | | தளிக்கின லாதுகளிப்பரி தாமடல் வேலண்ணலே. |
(இ - ள்.) கோறற் றொழிலினையுடைய வேலுடன்கூடிய தலைவனே! பளிக்குக் கற்களாலாகிய உரலின்கண் மூங்கில் நெல்லினையிட்டு யானைக் கொம்பாகிய உலக்கைபிடித்துச் செழித்த தேனினைத் துளிக்கின்ற மெல்லிய கூந்தலினையுடைய பெண்கள் உலக்கைப்பாட்டுடன் குற்றுகின்ற மேகந்தங்கிய மலையையுடையவனே! களிக்கின்ற கயல்மீன் போன்ற நோக்கினையுடைய தலைவியின் சுழலுகின்ற மனத்தினை வரைவுடன்வந்து அளிக்காதுவிடின் களிப்படைதல் அரிதாகும். இவள் களிக்க விரும்புவையாயின் விரைவில் வரைவுடன் வருவாயாகவென்றன ளென்க. (வி - ம்.) இவள் களிக்க விரும்புவையாயின் விரைவில்வந்து வரைந்து செல்வா யென்பது குறிப்பெச்சம். உயர்ந்த மூங்கில் நெல்லினை பளிக்குரலின்கட் பெய்து வள்ளைப்பாட்டைப் பாடுதற்கு யானைக் கொம்பை உலக்கையாகக்கொண்டு குற்றுதல்செய்து பயன்படுத்தியது போல உயர்ந்த தலைவனைத் தெய்வந்தானே கொண்டுவந்தும் அவனை நம்வயத்தினனாக்கி இக்களவொழுக்கத்தால் அவன் வரைந்துகோடலை முற்ற முடியாதிருக்கின்றோம் என்னும் இறைச்சிப் பொருட்புறத்ததாய் நின்றவாறு காண்க. வள்ளை - உலக்கைப்பாட்டு. களிப்பது அரிதென இயைக்க. மெய்ப்பாடு : அச்சம். பயன் : வரைவுகடாதல். (330) இற்செறிப்பறிவுறீஇ வரைவு கடாதல் அஃதாவது கிழத்தி அறிவுரைஇ வரைவுகடாயதோழி தேன் முதிருங்காலமறிந்து தேனழித்துக் குரம்பையிற் போய்ச் சேருங்குன் றின்கண்ணுள்ள மயில்போல்பவளை அரத்தினைப் பொடியாக்கும் வேற்படையை யுடையாய் அன்னையானவள் வீட்டினெல்லையைக் கடவற்க வெனக் கூறினாள். இனியாங்கள் புனங்காத்தலிற் பொருந்துவதின் றெனக் கூறாநிற்றல். |