பக்கம் எண் :

களவுப் படலம்1085

 நிரம்பிய கால மறிந்தெமர் நீடுசெந் தேனழித்துக்
 குரம்பையிற் போதருங் குன்றினெங் கோமள மாமயிலை
 அரம்பொடி யாக்கும்வை வேலிறை வாவன்னை நீயினியில்
 வரம்பிக வாதியென் றாள்புனங் காவல்கொன் மன்னுவதே.

(இ - ள்.) தன்னையராவுதல் செய்யுங் கருவியினையும் பொடியாகச் செய்யும் கூரியவேற்படையையுடைய தலைவனே, முதிருங் காலத்தை யறிந்து எம்மவர்கள் மிக்க தேனினையழித்துச் சிற்றூரின்கட் செல்லும் மலையிடத்துள்ள எங்கள் அழகிய மயில் போன்றவளைத் தாய்மார்கள் தலைவியே! இனிமேல் வீட்டினெல்லைவிட்டு நீங்காதிருப்பாயாக வென்றனர். புனத்தின்கண் (நின்னைக் கூடுவதற்கு) காவலாக நிலைபெறுவதற்குப் பொருந்துவதில்லை ஆதலால் நீ வருதலொழிவாயாக வென்றாளென்க.

(வி - ம்.) மன்னுவதே ஏகாரம் எதிர்மறை. குரம்பை - சிற்றூர். முதிர்ந்த தேனையழித்து எம்மவர் சிற்றூரின்கட் செல்லும் குன்றென்றதனால் எம்மவர் தலைவியின் வேறுபாடுகண்டு இவள் முதுக்குறைந்தனள். இனிப் புனங்காத்தல் தகுதியன்றென்று. இற்செறித்தனர் ஆதலின் வேறொரு தலைவனுக்கு மணஞ்செய்து கொடுப்பினுங் கொடுப்பர். ஆதலின் நீ வரைந்துகொண்டு செல்லென வரைவுகடாவினள். வரம்பு - எல்லை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செறிப்பறிவுறுத்து வரைவு கடாதல்.

(331)

புரையுறு கிளவியின் வரைவு கடாதல்

அஃதாவது இற்செறிப்பறிவுறீஇ வரைவுகடாய தோழி பார்ப்பினங்களை மயிலினங்கள் இறகினுள்ளே யடக்கித் தம்பால் வருகின்ற பருந்தினை வேர்ப்புண்டாகச் சீறுகின்ற மயிலினங்கள் வளர்கின்ற சோலையோடுகூடிய மலையினையுடைய சிலம்பனுக்குச் சங்கொலிப்பத் தலைவியினை வரையும் பொருட்டு அந்தணர் சான்றோர் அருந்தவத்தோரை முன்னிட்டு வரைந்துகோடல் விருப்பமில்லையாயின் நாமுரைத்ததனாற் பயனென்னையெனக் கூறாநிற்றல்.

 பார்ப்பினந் தோகையி னுள்ளே யடக்கிப் படர்பருந்தை
 வேர்ப்பெழச் சீறு மயில்வளர் சோலை வியன்சிலம்பற்
 கோர்ப்பில தாயின் வினையே னுரைத்துமென் னொள்வளையின்
 ஆர்ப்பெழ மாதைப் புனைவா னறிஞரி னாய்ந்ததுவே.

(இ - ள்.) ஒள்ளியசங்கம் ஒலிப்பத் தலைவியை வரைந்துகொள்ளும் பொருட்டு அந்தணர் சான்றோர் அருந்தவத்தோரை முன்னிட்டு ஆராய்ந்ததாகிய இச்செயலின்கண் குஞ்சுகளைத் தோகையின்கண்ணேயடக்கித் தன்பாற் படர்கின்ற பருந்தினை வேர்ப்பெழும்வண்ணம் சினக்கின்ற மயில்கள் வளர்கின்ற சிலம்பினையுடைய தலைவற்கு விருப்பமில்லையாயின் தீவினையையுடைய யான் சொல்லியதாற் பயன் யாதென்றா ளென்க.