| (வி - ம்.) பார்ப்பு - குஞ்சு. தோகை - ஈண்டுச் சிறை. வேர்ப்பு - வேர்த்தல். ஓர்ப்பு - விருப்பம். வளை - சங்கு : மங்கலச்சங்கு. ஆய்ந்தது - பெயர். புனைதல் - வரைதல். ஆர்ப்பெழமாதை ஒருவற்குமணம் புனைவானாய்ந்த இதன்கட் சிலம்பற்கு விருப்பமிலையாயின் யானுரைத்த தனாலாம் பயன் யாதென்றா ளென்க. பார்ப்பினங்களை உள்ளேயடக்கிப் பருந்தைச் சீறும் மயில் வளர்கின்ற சோலையுடைய தலைவர் என்றதனால் நந்தலைவியை மனதிலடக்கிக்கொண்டு அவளை விழைந்துவரும் அயலவரைச் சீறுந்தலைவரே. எம்மவர் அந்தணர் சான்றோரை முன்னிட்டு மணஞ்செய நினையாநின்றனர். ஆதலான் நீ அதற்குமுன் வரைந்து கொண்மின் என உள்ளுறை யெய்திநின்றதை யறிக. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : செறிப்பறிவுறீஇ வரைவு கடாதல். (332) இட்டுப்பிரிவின் இட்டிடை தளர்தல் அஃதாவது புரையறு கிளவியின் வரைவுகடாய தோழி தலைவன் சேணிடையின்றி இட்டிதாகப் பிரிந்தவழி, சிலம்பர் தேரும் வலவனும் தாமும் வந்துபொழில் நலனுண்டு நாமாட்சியழியத் துறந்தவர் வருதலைச் சொல்லியதுண்டோ எனப் பொழில்காள் கூறுமினெனக் கூறாநிற்றல். | | ஆமா னினந்திரி யுந்தடஞ் சார லகன்சிலம்பர் | | | வாமான் மணிப்பொலந் தேரும் வலவனுந் தாமும்வந்து | | | தேமா நறும்பொழில் காணல னுண்டு செறிபசப்பின் | | | நாமாண் பழியத் துறந்தார் வரவு நவின்றதுண்டே. |
(இ - ள்.) ஆமான்களின் குழூஉக்கள் திரிகின்ற பெருமைபொருந்திய மலைப்பக்கத்தினையுடைய மலைநாட்டவர் வாவிச்செல்லுகின்ற மணிகள்பதித்த பொன்னினாகிய தேரும் பாகனும் தாமும்வந்து தேமா மரங்களையுடைய நறுவிய பொழில்களே நங்கள் நலத்தை யுண்ணலாற் செறிந்த பசப்பால் நாம் மாட்சிகெடத் துறந்தவர் வருதலை நுமக்குச் சொல்லியதுண்டோ வென்றா ளென்க. (வி - ம்.) பொழில்காள் வந்து நாம் மாண்பழியத் துறந்தவர் தம் வரவை நவின்றதுண்டோ வென்க. ஏகாரம் : வினா. ஆமான் இனந்திரியும் சாரற்சிலம்பு எனவே அப்பசுக்கள் மக்களைக்கண்ணுற்ற ஞான்று நக்கல் அப்பொழுது இன்பாயிருந்து பின்னர்த் துன்பாய் விளைதல்போல, நம்முடன் கூடியகாலத்து இன்பஞ் சிறிதுபொழுது தந்து பிரிந்தகாலத்துத் துன்பினைப் பெரிதாயுளவாக்குந் தலைவர் என்று உள்ளுறை கொள்ளக் கிடந்தமை யறிக. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். (333) புள்ளினை நோக்கி யெள்ளியுள் ளுடைதல் அஃதாவது இட்டுப்பிரிவாற்றளர்ந்தவள் கிளிகளையும் மயிலினங்களையும் நோக்கித் தலைவர் இப்புனத்தின்கண் வந்த நாட்டொடங்கி ஏனற் கதிர்களை நுங்கட்கிரையாக விட்டோம். பிரிந்து செல்லாவகை நீங்கள் தடைசெய்திலீர்கள் எனக் கூறாநிற்றல். |