பக்கம் எண் :

1088தணிகைப் புராணம்

யுண்ணாது தங்கள் மனம் போனவாறே செல்லும் என்றதனான் இவருமிங்கிருந் தென்னோடின்ப நுகராது தம் பொறிகளின் வழிமனத்தைச் செலவிட்டு வேறு மாதரிடத்தின்ப நுகரும் பெற்றியர்போலும் என உள்ளுறை எய்தியவாறும் நோக்கி யுணர்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அச்சமிக் குரைத்தல்.

(335)

ஆற்றுவதெனத் தேராற்றினைப் போற்றல்

அஃதாவது அச்சமிக்குரைத்தவளாகிய தலைவி வண்டின் கூட்டங்களே! நான் பிணியான் வருந்துவதை யறிந்து தேரின் மணிநாவினையடக்கி வருந்தலைவர் சென்ற பெரிய வழியைக் குளிர்ந்தமலர்களையுடைய கோடுகளிற் பாய்ந்து மணப்பொடிகளை யுதிர்த்து அழியற்க. மலர்களையணிந்த எங்கூந்தலின் மொய்க்க வருவீராக எனக் கூறாநிற்றல்.

 பிணிநா முழப்ப தறிந்து பிறங்க னிகர்பெருந்தேர்
 மணிநா வடக்கி வருந்தொழி லார்சென்ற வானதரைப்
 பணிநாண் மலர்க்கொம்பர்ப் பாய்ந்துபைந் தாது படுத்தழியல்
 அணிநாண் மலர்க்குழன் மூசுதிர் வம்மி னளிக்குலமே.

(இ - ள்.) வண்டின் கூட்டங்களே (அவர் பிரிவால்) நாம் நோயான் வருந்துவதை யறிந்துவைத்து மலையினையொத்த பெரிய தேரின்கட் கட்டிய மணிநாவினை யார்த்துவருஞ் செயலுடையார் சென்ற பெரிய வழியினைத் தாழ்ந்த அன்றலர்ந்த மலர்களையுடைய கொம்பரின்கட் பாய்ந்து பசியமலர்ப் பொடிகளை யுதிர்த்து அழியாதிருப்பீராக. அன்றலர்ந்த மலர்களையணிந்த எங்கூந்தலின்கண் நெருங்கி வாருங்கள் என்றாளென்க.

(வி - ம்.) அளிக்குலங்களே அதிற்பாய்ந்து படுத்து அழியாதிருப்பீர்களாக. குழலின் மூசவம்மின். பிறரறியாவண்ணம் ஓசையை அடக்கிச் செலுத்தி வருந்தேரார் என்பாள். "மணிநாவடக்கி வருந்தொழிலார்" என்றாள். அதர் - ஈண்டுச் சுவடென்க. பிறங்கல் - மலை. மெய்ப்பாடு : அழுகை. பயன் :
அயர்வுயிர்த்தல்.

(336)

வடுவகிர்க்கண்ணி கொடுமைகூறல்

அஃதாவது தேராற்றினைப் போற்றிய தலைவி தம்மிடத்து நட்புக் கொள்ளாத பிறரிடத்துத் தீங்கிழைப்பவர்களைக் கொடுமையுடையவர் என்று கூறுவர் உலகத்தோர். விட்டுநீங்காது கூடியிருந்தவரிடத்துத் தீங்கு செய்பவரைக் கலந்து அறியார் ஆராயாதவர்கள் அத்தலைவரை நல்லவரென்று ஏத்தெடுப்பினும் நல்லநெஞ்சமே! அத்தலைவரைக் கூடினவர்கள் வாட்டமடையாதாரில்லை. வாட்டமுடையாரே யாவரெனக் கூறாநிற்றல்.

 கூடா தவருழைத் தீங்கிழைப் போரைக் கொடியரென்போர்
 வீடா தவருழைத் தீங்கிழைத் தாரை விராயறியார்
 நாடா தவரவர் நல்லரென் றேத்தினு நன்னெஞ்சமே.
 வாடா தவரல்ல ராவரன் னாரை மரீஇயவரே.