| | மண்டூ துலைமெழு காயின ளென்று வருதிகிள்ளாய் | | | ஒண்டூ துணமனை யாளுய்க்கும் பாளித முன்வயத்தே. |
(இ - ள்.) கிளியே! வண்டுகள் உளர்தல்செய்து மலர்ப்பொடியை ஊதுகின்ற மாலையையணிந்த தலைவரிடத்தில் (ஐயனே யான் ஒருபெண் மகள் படும்துன்பினைக் கண்ணுற்று) அப்பெண்ணினுக்குத் தூதாக வந்தனனென்று கையினைக் குவித்து அவர் பெருவிருப்பினைக் கண்ணுற்று (உன்பாற்) காதலினையுடைய அத்தலைவியின் மனம் கொல்லனது ஊதுதற் றொழிலையுடைய உலையின்கட் பொருந்திய மெழுகு போலக் கரைந்தனளென்று கூறி வருவாய். அங்ஙனம் வருவாயாயின் ஒளிபொருந்திய சட்டியின்கண் நந் தாயானவள் கொடுக்கும் பாற்சோறு உன் வயத்ததே யாகு மென்றாளென்க. (வி - ம்.) கிளியே, மார்பிடத்துக் கைகூப்பி ஒருபெண் ணிமித்தம் தூதுவந்தே னென்று கூறி அவர் நயப்பைக் கண்டு மெழுகாயினள் என்று கூறிவருவாய் எனமுடிக்க. ஊது உலைமண்டு மெழுகாயினளெனப் பிரிக்க. தூதுள் நம்மனையாள் உய்க்கும் பாளிதம் எனப் பிரிக்க. தூது - சட்டி. பாளிதம் - சோறு. சுவாகதம் - கிளி. "அச்சுவாகத மொழியினாள்" என்றார் பிறரும். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (348) போது கூம்பப் பேதுற் றுரைத்தல் அஃதாவது கிளியினைநோக்கித் தூதுசொல்லென்ற தலைவி சிறப்புப் பொருந்திய கணையாழி பூமியின்கண் வளைகளோடு செல்லச்சென்ற சக்கரத்தையுடைய தேருடன்கூடிய தலைவர் தாமரைகள் வெங்கதிர்க் கடவுள்தோன்ற மகிழ்ந்து அவன் நீங்கக் கவலுதலைக் கண்டறிவராயின் என் நீர்மையினையும் நினைபவ ராவரெனக் கூறாநிற்றல். | | சீராழி வையத்து வால்வளை யோடுகச் சென்றுவிட்ட | | | போராழி வையத் தவர்மது வாருமம் போருகங்கள் | | | ஓராழி வையத் தவனான் மகிழ்ந்தொழி யக்கவறல் | | | நீராழி வையத் தறியினென் னீரு நினைகுவரே. |
(இ - ள்.) சிறப்புப் பொருந்திய மோதிரமும் வெள்ளிய சங்க வளையல்களோடு சிந்தும்வண்ணம் (நம்மைப்பிரிந்து) சென்றுவிட்ட போர்க்குரிய உருளையுடன்கூடிய தேரினையுடைய தலைவர் தேனைச் சிந்தும் தாமரைமலர்கள் ஓருருளையையுடைய தேருடன்கூடிய வெங்கதிர்க் கடவுளான் மகிழ்ச்சியுற்று அவனீங்கக் கவற்சியுறுதலை நீர் நிறைந்த கடலாற்சூழப்பட்ட இந்நிலவுலகின்கண் (நந்தலைவர்) அறிவாராயின் என் நீர்மையினையும் நினைபவராவ ரென்க. (வி - ம்.) போது - மலரும் பருவத்தரும்பு. ஆழியும் வளையும் நீங்கச் சென்றுவிட்ட தலைவர் தாமரைமலர்கள் வெங்கதிர்க்கடவுள் தோன்ற மகிழ்ந்தும் அவனீங்க வருந்துதலையும் காண்பராயின் என் நீர்மையினையும் நினைப்பவராவர் எனமுடிக்க. போராழி வையத்தவர் - போர்க்குரிய உருளையையுடைய தேரவர். ஓராழிவையத்தவன் - ஒற்றைச் சக்கரத்தையுடைய தேருடன்கூடிய வெங்கதிர்க்கடவுள். நீராழி |