பக்கம் எண் :

களவுப் படலம்1097

வையம் - கடலாற் சூழப்பட்ட உலகம். மெய்ப்பாடு : அழுகை. பயன் :
அயர்வுயிர்த்தல்.

(349)

ஆன்மணி வேய்ங்குழற் காற்றா துரைத்தல்

அஃதாவது போதுகூம்பப் பேதுற்றுரைத்த தலைவி அறவடிவாகிய ஆனேற்றினுக்கினமாய் வருகின்ற அக்குலத்தின்கட் டோன்றிய வலி பொருந்திய ஆனேற்றின்மணி என்னுள்ளம் பொருமும் படிகறங்குவ தென்று கருதின் முல்லைநிலத்தின்கண்ணுள்ள இடையர்கள் குழல் தலைவர் தேர் திரும்பி வருவதற்குமுன்னர் என்னுயிரைத் தின்னாநிற்கும் எனக் கூறாநிற்றல்.

 தருமக் கடவு ளெனுமிமி லேறு தனக்கினமாய்
 வருமக் குலத்தெறு ழான்கழுத் தார்த்த மணியெனுளம்
 பொருமக் கறங்குவ தென்றாற் புனவேய்ங் குழலவர்தேர்
 திருமக் கடவி வருமுன்ன ராருயிர் தின்றிடுமே.

(இ - ள்.) அறக்கடவுள் என்று சொல்லத்தகும் இமிலினையுடைய (இறைவன் ஊர்தியாகிய) ஏற்றினுக்கினமாகத் தோன்றிய வலியினையுடைய ஆன்களின் கழுத்தினிடத்துப் பொருந்தியமணி என்னுளம் பொருமும்வண்ணம் கறங்குவதென்று கருதின் முல்லைநிலத்தின்கண்ணுள்ள புல்லாங்குழல் அத்தலைவர் தேரைத் திரும்பக் கடவிவருதற்கு முன்னரே எனதரிய உயிரைத் தின்றிடுமென்றா ளென்க.

(வி - ம்.) மணி கறங்குவதென்று நினைக்குமுன் வேய்ங்குழல் என்னுயிரைத் தின்றிடும் எனமுடிக்க. இறைவன் ஏறு - ஊர்தியாகிய ஏறு. அறக்கடவுளின் வடிவென்பாள். "தருமக்கடவுளெனு மிமிலேறு" என்றனள். இமில் - முரிப்பு. திரும - திரும்ப. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(350)

மந்தா நிலத்தொடு நொந்தாங் குரைத்தல்

அஃதாவது ஆன்மணி வேய்ங்குழற் காற்றாதுரைத்த தலைவி தமிழினையுடைய பொதியமலைபெற்ற தென்றற் காற்றே தினைவளர்கின்ற சாரலின் பக்கலிலுள்ள பொழிலின்கண் மாலையணிந்த மார்பினைத் தந்தவர் கூடியநாளெல்லாம் குளிர்ச்சி பொருந்தவந்தனை (அவர் பிரிந்த காலத்து) நான் மனம்வருந்த வீணேவந்து தீயினைப்போல வெப்பஞ் செய்து பொருந்துவதற்குக் காரணமென்னையோ வெனக் கூறாநிற்றல்.

 பைந்தா ரகலந் தினைவளர் சாரற் பசும்பொழில்வாய்த்
 தந்தா ரொருங்கிய வைகலெல் லாந்தண் குளிர்விரவ
 வந்தாய் செழுந்தமிழ் மால்வரை யீன்றமந் தாநிலமே
 சிந்தா குலமுறக் கொன்வந்து தீயிற் செறிவதென்னே

(இ - ள்.) செழித்த (இயல் இசை நாடகமென்னும்) முத்தமிழும் தோன்றிய மேகங்கள் தங்கப்பெற்ற பொதியவெற் பீன்ற தென்றற் காற்றே! தினைக்கதிர்கள் வளர்கின்ற மலைப்பக்கத்துள்ள சாரலிடத்துப் பசியமாலையை யணிந்த மார்பினை (எனக்கு) அளித்த தலைவர் ஒன்று