| சேர்ந்துள்ள நாள்கடோறும் மிக்க குளிர்ச்சிபொருந்த வந்தனை (அவர் பிரிந்துள்ள இக்காலத்து) யான் மனவருத்தமுற வீணேவந்து (அணுகினாரைச் சுடும்) தீயினைப்போல பொருந்துவதற்குக் காரணமென்னே கூறுவாயென்ற ளென்க. (வி - ம்.) அகலந்தந்தார் கூடிய காலமெல்லாம் குளிர்விரவ வந்தனை. அவர் பிரிந்த காலத்து இனிய தமிழ்மலையிற் பிறந்திருந்தும் வீணே தீயைப்போல வந்து என்னை வருத்துவதென்னை யென்றாளென முடிவுசெய்க. ஒருங்கிய - கூடிய. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (351) தானுறு பிணியிற் றண்கடல் சேர்த்தல் அஃதாவது மந்தமாருதத்தினொடு நொந்துரைத் தலைவி உயர்ச்சியுற்றுக் கரையினிடத்து விழுந்து புரளுதல்செய்து ஓலமிட்டு வளைந்து கலக்கமுற்று மறுகுதல்செய்து துளிக்கின்ற கரியகடலே (அன்பர் பிரிந்த துன்பினைத்) தாங்குதல்செய்து கரைகின்ற மனதுடன் சுழலுகின்ற தமியேனைப்போல நீங்குதலான் வருந்துகின்றவருடைய நட்பை நீண்ட உலகத்தில் (என்னைப்போல) நீயுமுடையாய் போலுமெனக் கூறாநிற்றல். | | ஓங்கிக் கரைக்கண் விழுந்து புரண்டுமிக் கோலமிட்டு | | | வாங்கிக் கலங்கி மறுகித் துளும்பு மணிக்கடலே | | | தாங்கிக் கரையுநெஞ் சோடல மந்த தமியனைப்போல் | | | நீங்கிக் கவற்றுநர் கேண்மையை நீயுங்கொ னீணிலத்தே. |
(இ - ள்.) உயர்ச்சியுற்றுக் கரையினிடத்து வீழ்தலுற்றுப் புரளுதல் செய்து மிகவுமோல மிடுதல்செய்து வளைதல்செய்து கலக்கமுற்று மறுகுதல்செய்து துளிக்கின்ற கரியகடலே! (அன்பர் பிரிதலாற் றுன்பத்தை) தாங்குதல்செய்து கரைதலுறுகின்ற நெஞ்சினோடு அழற்சியுற்ற தமியளாகிய என்னைப்போல இந்நீண்ட உலகின்கண் நம்பின மாதரைவிட்டு நீங்கிக் கவற்றுதல் செய்யும் தலைவர்கள் நட்பை நீயுமுடையை யாயினாய்போலு மென்றன ளென்க. (வி - ம்.) கடலே! இவ்வுலகத்தில் என்னைப்போன்று நீயும் நீங்குதலால் வருந்துகின்றவர் கேண்மையையும் உடையையோவென வினைமுடிவுசெய்க. வாங்கி - வளைந்து. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (352) மதியெழல் கண்டு கதிசெல லென்றல் அஃதாவது தன்றுயரைக் கடலோடு சேர்த்துக் கூறிய தலைவி விண்ணின்கண் முத்தியென்று சொல்லத்தக்க வெண்கதிர்க்கடவுளே! குளிர்ந்த பாற்கடலின்கண்ணே தோன்றி அமிழ்தத்தினை உலகத்திற் பரவச்செய்யும் திருவும், அமிழ்தகலை வடிவமும் வெப்பத்தினைத் தந்தாலும் கண்ணின் பகுதியில் கழலினையணிந்த காலையுடையானைக் கண்ணுற்ற நின்றிருவுருவைக் காட்டி நிற்பாயாக வெனக் கூறாநிற்றல். |