பக்கம் எண் :

களவுப் படலம்1099

 தண்பாற் பெருங்கட னற்றா யுடன்பிறந் தாரமிழ்து
 மண்பாற் பரவுந் திருவு மமிழ்த கலைவடிவும்
 விண்பாற் கதியென்ன வெண்டிங்கள் வெப்பந் தரினுநன்றே
 கண்பாற் கழற்கழ லான்கண்ட நின்னுருக் காட்டிநில்லே.

(இ - ள்.) விண்ணின்கண் முத்தியென்று சொல்லத் தக்கவெண் கதிர்க்கடவுளே! குளிர்ந்த பாற்கடலாகிய நற்றாயிடத்துப் பிறந்து பொருந்துகின்ற மண்ணினிடத்துப் பரவாநின்ற அமிழ்தமாகிய செல்வமும், அமிழ்தகலைவடிவமாகிய கலையும், அவரைப் பிரிந்தவெனக்கு வெப்பத்தைத் தந்தாலும் நல்லதே காண். (உன்) கண்ணின் பகுதியான வீரக்கழலையணிந்த காலையுடையானைக் கண்ட நின்திருவுருவைக் காட்டி நிற்பாயென்றா ளென்க.

(வி - ம்.) நற்றாயுடன் - நற்றாயிடத்து. கழல் - ஒன்று வீரக்கழல், ஒன்று பதம். கதிசெலல் என்றல் விரைந்து செல்லாதே யென்றல். அது "காட்டிநில் லென்பதனாற்பெற்றாம். திருவும் கலைவடிவும்" வெப்பந்தரினும் கண்ணின் பகுதியால் தலைவன் கண்ட நின்னுருவைக் காட்டி நில்லென வினைமுடிவு செய்க. அமிழ்தினைப் பூமியிற் பரவச் செய்தலே வெண்கதிர்க் கடவுட்குச் செல்வமென்பாள். "மண்பாற் பரவுந்திருவும்" என்றாள். கதி - முத்தி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(353)

கண்ணிலை நினக்கெனத் தண்சுனைக் குரைத்தல்

அஃதாவது மதியெழலைக் கண்டு விரைந்து செல்லற்க வென்ற தலைவி சுனையே! பாவையரோடு கலந்து விளையாடுகின்ற என்றிறத்தும் துவளக் கதுவியது என்ன காரணமென்று கேட்க இத்துணைக் காலங் கழித்தனிர், இதுமுறையோ வெனக் கூறாநிற்றல்.

 தவளைக் குரற்கிண் கிணியடிப் பாவையர் தங்களொடும்
 திவளக் கலவிநின் றாட்டயர் வேன்றிறத் தும்முறையோ
 துவளக் கதுவிய தென்னையென் றித்துணைப் போதுசென்றே
 குவளைக் கருங்கண் விழித்தனிர் நோக்கக் கொழுஞ்சுனையே.

(இ - ள்.) கொழுவிய சுனையீர்! தவளையின் குரல்போலும் ஒலியினையுடைய கிண்கிணிமாலையை யணிந்த காலுடன்கூடிய பதுமையையொத்த பெண்களோடும் விளங்கக் கலந்துநின்று நீராடலைச்செய்யும் என்னிடத்தும் (இங்ஙனம்செய்தல்) முறைமையாமோ? வருத்தமுற (உனக்குப் பொருந்தியது யாதென்று இத்துணைக் காலஞ்சென்றோ குவளை மலராகிய கண்கள் (என்னை) நோக்க விழித்தீரென்றா ளென்க.

(வி - ம்.) கண்ணிலை - (உனக்குக்) கண்ணோட்டமில்லை. தவளைக் குரல் - தவளையின் குரல்போலும் ஒலி. திவள - விளங்க. கலவி - கலந்து. துவள - வருந்த. குவளையாகிய கண்ணென்க. ஆட்டயர் - நீராடல். சுனையே உன்னிடத்து நட்புடைய என்மாட்டு இங்ஙனஞ் செய்தல் நினக்கு முறையாகுமோ வென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(354)