(இ - ள்.) சீவகரணங்களெல்லாஞ் சிவகரணங்களாகும் வண்ணம் வகரசிகரத்தை யருள்வடிவாகிய பரமாசிரியன் பாற்பெற்ற மெய்யடியார்க்காயின், இரண்டறப் பொருந்திய வொற்றுமையால் என் பாடற் குற்றம் பொறுமெனவும் மதிக்கவெனவுங்கூறல் பொருந்தும்; அவரைப் போல ஆன்றோரிடத்து என்னுரையைக் காத்தருள்கவென்று இளகுதலற்ற மனத்தையுடைய வெளியேனுஞ் சொல்வது தகுதியன்றென்க. (வி - ம்.) ஒருமை - ஒற்றுமை; வசியென்னு மடியார்கள் அதன் பொருளோடு ஏகனாகி நிற்குந்தன்மையால் என் பாடலென்றும், அவை யடக்கங்கூறல் ஆன்றோராசாரமாதலின் அந்நியமந்தப் பாவண்ணம் குற்றம் பொறுமென்றும், கூறல் முறைமையாம். பேதமுடைய யான்கூறல் முறையன்றென்க. (2) | முதுக்குறை வுடையோர் நிற்ப முழங்குதன் காதை யென்னால் | | விதுக்குறை முடியோன் மைந்தன் விரிந்தசெந் தமிழ்ச்சொல் லாகப் | | புதுக்குபு கேட்கு மார்வம் பாகடை புன்சி றார்கை | | மதுக்குலாந் தொடையன் மார்பர் வைத்துவாய் கவர்தல் போலாம். |
(இ - ள்.) மூன்றாம் பிறையைத் தரித்த திருமுடியையுடைய இறைவன் றிருக்குமாரர் பேரறிவுடையார் பலரும் நிற்கவும் மெய்ந் நூல்களெல்லாம் முழங்காநின்ற தனது திப்பிய சரிதத்தைச் சிற்றறிவுடைய வென்னால் செந்தமிழின்கட் பெருங்காப்பியமாகப் புதுக்கு வித்துத் திருச்செவியிற் கேளா நிற்குமாசை. என்போலவெனின் தேன் பொருந்திய மாலையை யணிந்த மார்பினையுடைய தந்தைமார் தம் புல்லிய சிறார்களின் கரத்திற் பாக்கு வெற்றிலையை வைத்துத் தம் வாயினால் கவரும் விருப்பத்தை யொக்குமென்க. (வி - ம்.) கலைகளான் நிறைந்த நிறைமதியினை யணியாது விடுத்துக் குறைமதியினை யணிந்த பெருமான் றிருக்குமாரராதலின், கலைகளானிறைந்த நிறைமதியினையுடையார் பலரிருப்ப அவரை விடுத்துக் குறைமதியினையுடைய வெளியேனாற் புதுக்குபு கேட்டல் முறையாகலின் விதுக்குறையுடையோன் மைந்தன் புதுக்குபு கேட்கு மார்வமென்றார்; செந்தமிழ் விரிந்த சொல்லாக வென்க; சொல் ஆகுபெயர்; என்னாற் கேட்கு மார்வம் பாகடையைச் சிறார் கைவைத்துக் கவர்தல் போலுமென்க. முதுக்குறைவு. பேரறிவு; விதுக்குறை - குறைச்சந்திரன்; பாகு - பாக்கு; அடை ஈண்டு வெற்றிலை; நிற்பவுமென்னும் எச்சவும்மையும் புதுக்குவித்து என்னும் பிறவினை யுணர்த்தும் விவ்விகுதியுந் தொக்கன. (3) |