1. திருநாட்டுப் படலம் | வட்டவாய்க் கமலத் தண்ணன் மணிமுடி துளங்க வோச்சிக் | | குட்டிய குமரப்புத்தேள் குலாவிய தணிகைக் குன்றம் | | அட்டொளி மணியின் மோலி யணிந்தெனத் தன்பாற் கொண்ட | | முட்டறு பாலி நாடு முச்சகத் துயர்ந்த தொன்றே. |
(இ - ள்.) வட்டமாகிய வாயினையுடைய தாமரை யாசனத்தி லெழுந்தருளியிருக்கின்ற பிரமனது அழகிய சிரங்கள் குலுங்கும்படி திருக்கரங்களினால் வீசிக்குட்டுதலைச் செய்த குமாரக் கடவுள் எழுந்தருளுதலால் விளங்கிய தணிகைமலையை உருக்கிய வொளியையுடைய அரதனங்கள் பதித்த கிரீடமணிந்ததென்று சொல்லும்படி தன்னிடத்துக் கொண்ட நாட்டிற்குளவாகிய எண் வகையாகிய குற்றமற்ற பாலி நாடானது மூவுலகத்தினு முயர்ந்ததொன்றே யாமென்க. (வி - ம்.) குன்றத்தைத் தன்பாற் கொண்ட பாலிநாடென்க. ஓச்சல் - வீசல்; குன்றம் இரண்டாவதன் றொகை; அட்டொளி - உருக்கிய வொளி, இதனை "அட்டொளி யரத்த வாய்க்கணிகை" என்னுஞ் சிந்தாமணி நாமகளிலம்பகம் 69 செய்யுளுரையானுணர்க. முட்டு - குற்றம், நாட்டிற்குவரும் எண்வகைக் குற்றமாவன - "விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும் பெயல் காலெட்டு" என்றதனாலும், "எண்ணி னிடரெட்டு மின்றிவயற் செந்நெற், கண்ணின் மலருங் கருநீலம் - விண்ணின் வகைத்தாய் வளனோடு வைகின்று வெள்வேல், நகைத்தாரான் றான்விரும்புநாடு" என்னும் புறப்பொருள் வெண்பா மாலை யானு மறிக; ஏகாரம் பிரிநிலையுந் தேற்றமுமாம்; கமலம் : ஆகுபெயர்; உயர்ந்தது இறந்தகால வினைமுற்று; இது பிரிநிலை யுயர்வு நவிற்சியணி; (1) | துலங்கலில் போக மூட்டித் தொக்கநாளிற்ற காலை | | யலங்கலி லறத்தி னாற்றா லருங்கதி யுயிரை யேய்த்துப் | | புலங்கெழு தன்பாற் போகம் புலர்ந்துழிக் கிழக்க தாக்கும் | | நலங்கெழு துறக்க விண்ணை நக்கது தொண்டை நாடு. |
(இ - ள்.) தொண்டை நாடானது தன்கட் பிறந்த வுயிரை அசுரர் முதலியோரா லிடையீடுறுந் துறக்க வின்பம்போலாது பகைவராற் கெடுதலில்லாத போகத்தை யுண்பித்து வரையறை செய்த நாள் முடிவுற்ற காலத்துப் போகம் நுகர்தலாற் கெட்டொழியாது, சிவநல்வினைப் பயனால் பெறுதற்கரிய வீட்டுலகிற் சேர்த்துப் பஞ்சப்புலன்களுக்கு விடயமாகிய தன்னிடத்துள்ள வின்பம் நுகர்ந்தொழிந்த காலத்துக் கீழ் வீழச் செய்யும் நன்மை பொருந்திய துறக்கமாகிய விண்ணாட்டினைச் சிரித்ததென்க. (வி - ம்.) தொண்டைநாடு தன்கட் பிறந்த வுயிரைப்போக மூட்டிக் கதியேய்த்து விண்ணை நக்கதென்க. அருங்கதி - பெறுதற்கரிய வீட்டுலகம்; ஏய்த்தல் - வீட்டுலகிற் குடியேற்றுதல்; அலங்கலிலறம் - போக நுகர்தலாற் கெட்டொழியாது மேற்கதியுய்க்குஞ் சிவநல்வினை; துலங்கல் - கெடுதல்; துளங்கல் என்பது எதுகை நோக்கி விகாரப்பட்டது; |