பக்கம் எண் :

திருநாட்டுப் படலம்13

போலியெனினும் பொருந்தும். புலர்தல் - கெடுதல்; கிழக்கு - கீழ்; இதனை "செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை, காணிற் கிழக்காந் தலை" யென்னுந் திருக்குறளானறிக; புலர்ந்த வென்னும் பெயரெச்சத்தகரந்தொக்கது; அது பகுதிப் பொருள் விகுதி; இஃது ஒழிபுயர்பு நவிற்சியணி.

(2)

 கோண்முறை பிறழ்ந்து மாரிக் குளிர்பெயல் வறக்கு மேனுந்
 தாண்முறை தப்பா வண்ணந் ததைமண லகழுந் தோறும்
 ஊண்முறைப் புனல்வந் தோடு மொலிநதிக் குலத்தா லேனை
 வீண்முறை நாட்டை யெல்லாம் வீழ்த்தது தொண்டை நாடு.

(இ - ள்.) தொண்டைநாடு நவக்கிரகங்கள் (தாங்கள் இயங்குகின்ற) முறைமையினின்று மாறுபடுதலால் மாரிக்காலத்துளவாகுங் குளிர்ந்த மழை பெய்யாது பொய்க்குமாயினும், செறிந்த மணலைத் தோண்டுந்தோறும் முயற்சியின் பாகுபாடு தவறாவண்ணம் உண்ணுந் தகுதியையுடைய புனல் சுரந்தூறுகின்ற செழித்த நதியின் கூட்டத்தால் அநீதியையுடைய மற்றைய நாட்டையெல்லாங்
கீழாக்கியதென்க.

(வி - ம்.) கோள் - நவக்கிரகம்; பிறழ்ந்து என்னுஞ் செய்தெனெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது; மாரி என்பது காலத்தை யுணர்த்தி நின்றமையின் ஆகுபெயர்; ஒலித்தல் - தழைத்தல்; 'வாரொலி கூந்தனின் மணமகன்றன்னை' என்னுஞ் சிலப்பதிகாரப் பதிகத்துரையில் ஒலித்தல் தழைத்தலெனப் பொருள் கூறியிருப்பதை நோக்குக; ஊண் முறைப்புனல் - ஊணைக்கொடுத்தற் கேதுவாகிய புனலென்பாருமுளர். கோள்முறை பிறழ்தல் - வெள்ளி முதலிய கோள்கள் மழைக்குக் காரணமாகாத இராசிகளிற் சேறல்; இது பிரிநிலை யுயர்வு நவிற்சியணி.

(3)

 வருபுனல் வாய்ந்த வோங்கல் வல்லர ணிருநீ ரென்னும்
 பொருவில்பல் லுறுப்பிற் றாகிப் பொங்கிய செல்வ மேமம்
 வெருள்பிணி யின்மை யின்பம் விளைவுநன் கணிந்து தாழ்வில்
 திருவினர் தக்கோர் சாலச் செறிந்தது தொண்டை நாடு.

(இ - ள்.) தொண்டைநாடானது இடையறாது வருகின்ற நீரும் அந்நீரையுடைய வாய்ப்புடைத்தாகிய மலையும், வலிய மதிலும் மேனீருங் கீழ்நீருமாகிய ஒப்பில்லாத பல அங்கங்களையுடையதாகி மிகுந்த செல்வமுங் காவலும் அஞ்சத்தக்க பிணியின்மையும் இன்பமும் பலவகை விளைவும் நன்றாகப் பொருந்தி என்றுங் கெடுதலில்லாத செல்வர்களும் தகுதியையுடைய சான்றோரும் செறிந்துறையப்பட்டது.

(வி - ம்.) வருபுனல் - அருவிநீர்; இருநீர் - மேனீர் கீழ்நீர்; "மலையரண் காட்டரண் மதிலரண் நீரரண்; வகையுறு சிறப்பினால் வகையரணே" எனக் கூறியிருத்தலின் இவைகள் அரணமெனக்கொள்க.

"தள்ளா விளையுளும்" "இருபுனலும்" "பிணியின்மை" இம்முதற்குறிப்புடைய குறள்களின் பொருள் இச்செய்யுளில் அமைந்திருத்தல் காண்க. மாரிக்காலத்து மலை, நீரையுட்கொண்டு கோடைக்காலத்தில் வெளியிடுதலின் வாய்ந்த வோங்கல் என்றார். இது தற்குறிப்பேற்றம்.