| (தலைவர் என்னைக் கூடுந்தன்மை) நீங்கியதற்கே (அவர் சென்ற இடத்தினை நோக்குகின்ற) கண்களை மீளச்செய்தும் பகைவர்போல நீயென்னை விடுத்தமைக்குக் காரணம் விளம்புவாயாக வென்று தலைவனை (வந்து போங்காலையில் மனத்தைக் கவர்ந்து, வராமலிருக்கின்ற காலத்துக் கண்களைக் கவர்ந்தும்) துன்பத்திடத்துப் பொருத்தியதற்கு யாதொரு பயனுமின்றாய் விழித்தல் செய்தே னென்றாளென்க. (வி - ம்.) தலைவன் பிரிந்திருக்குங் காலையில் தலைவனைக் காணும் காட்சியிலேயே கண்கள் செல்லுதல்பற்றி "அடாத்தொழின்மை தொடுத்தமைக்கே யெதிர்கண்களை மீட்டு" மென்றாள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (356) நறைக்குழற் றோழி சிறைப்புறத் துரைத்தல் அஃதாவது கனவின்கண் அரற்றிய தலைவியின் நிலைகண்ட தோழி வெண்கதிர்க்கடவுள் உழுதலான் தேனடைகீறி ஒழுகும் தேனானது குன்றவர்க்கும் ஈயினுக்கும் பயன்படாமல் மலைப்பிளப்பில் விழுந்தன்மையையுடைய தலைவர் மலைச்சிகரத்திற் றங்குகின்ற பறவைக் கூட்டங்களே! உங்களைத் தொழுதனன். முத்தத்தைக் கண்களும் தனமாகிய மலைகள் பொன்னினையும் உளவாக்குகின்ற இத்தன்மையைத் தலைவரிடத்துச் சொல்வீராகவெனக் கூறாநிற்றல். | | கலைக்கோ டுழவடை கீறிப்பைந் தேன்கவர் கானவர்க்கும் | | | மிலைக்கோடு மீக்கும் பயவா திருவிடர் வீழுமன்பர் | | | மலைக்கோ டுறுகுரு கீர்தொழு தேன்முத்தம் வாள்விழியும் | | | முலைக்கோடு பொன்னும் விளைக்குமிந் நீர்மை மொழிமின்களே. |
(இ - ள்.) வெண்கதிர்க்கடவுள் கலைகள் உழுதலான் தேன்கூடுகள் உடைந்து பசிய தேனினைக் கொள்கின்ற வேடர் கூட்டங்களுக்கும் இலையின்கட் செல்கின்ற ஈயினுக்கும் பயன்படாமல் மலைப்பிளப்பின் கண் வீழுகின்ற அன்பர்மலைச் சிகரத்தின்கட் பொருந்துகின்ற பறவைக் கூட்டங்களே! முத்தம்போன்ற கண்ணீர்த்துளிகளை ஒளிபொருந்திய கண்களும் முலையின் சிகரங்கள் பொன்னையொத்த பசலைநிறத்தினை உளவாக்கும் தலைவிநின் இந்த நிலையினைச் சொல்லுங்கள் என்றானென்க. (வி - ம்.) இந்நீர்மை கண்கலுழுதலும் முலைகள் பசலைபடரப் பெறுவதுமாகிய தன்மை. கலைக்கோடு - சந்திரன். விடர் - மலைப் பிளப்பு. இலையின்கட் செல்லும்படியான ஈயென்னும் பறவையென்க. சிறைப்புறம் - தலைவன் வந்துழி. அத்தலைவன் வந்தமையை அறியா தாள்போன்று தோழி அவன் தன்னைக் காணாநிலைமைக்கணின்று அத்தலைவன் கேட்பப் புண் முதலியவற்றோடு சொன்னிகழ்த்தல். தேனடை கீறிக் கானவர்க்கும் ஈக்கும் பயன்படாது விடரின்கண்ணே வீழும் அன்பர் மலையென்றதனால் "தலைவியின் இளமை முதலிய நலமெல்லாம் நீ வந்து களவிற்கூடிப் பிரிதலால் வேறுபட்டதோடு வேறு தலைவர் வந்து மணம் செய்யவும் இயலாமல் எங்களையுந் துன்பினுக்குள்ளாக்கினாய் என்னுமுள்ளுறை தோன்றச் சிறைப்புறத் தலைவன் கேட்கும் வண்ணங் கூறியிருத்தல் காண்க. இலைக்கு + ஓடும் ஈ எனப் பிரிக்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (357) |