பக்கம் எண் :

1102தணிகைப் புராணம்

அலர்மிகு கின்றமை தலைவற் குரைத்தல்

அஃதாவது சிறைப்புறத்தின்கண் நின்ற தலைவற்கு, தன்னுள்ளக் கருத்தைப் புண் முதலியவற்றை முன்னிலையாக்கி உரைத்த தோழி அன்பனே! நீ வளர்த்த காரியங்களுள் வைத்துக் கோணாத பெருமையை உடையது யாதென நீ குறித்துரைப்பாயாக வெனக் கூறாநிற்றல்.

 காணாப் பெருந்துய ரோநிழ லீன்ற கருந்தளிர்போல்
 பேணாப் பெரும்பசப் போபெருந் தேவ ருலகுநிமிர்
 மாணாப் பெருங்கௌவை யோவன்ப விங்ஙன் வளர்த்தவற்றுள்
 கோணாப் பெருமைய தியானறி பாக்குக் குறித்துரையே.

(இ - ள்.) அன்பனே (நின்னை யாங்கள்) காணாமையானுளவாகிய பெரிய துன்பமோ நிழலின்கணீன்ற பெருமைபொருந்திய தளிரினைப் போன்ற (யாவராலும் விரும்பப்படாத மிகுந்த) பசலை நிறமோ? பெரிய தேவருலகிடத்தும் பரந்த மாட்சியடையாத பெரிய பழிச்சொல்லோ? இஞ்ஞான்று (உன்னால்) வளர்க்கப்பட்டனவாகிய மூன்றனுள் மாறுபாடடையாத பெருமையுடையது (இஃதென) யானறியும் வண்ணம் குறித்துரைப்பாயாக வென்றாளென்க.

(வி - ம்.) கருமை - பெருமை. பசப்பு - பசலைநிறம். நிமிர்தல் - பரத்தல். கௌவை - பழிச்சொல். கோணா - மாறுபடாத. அறிபாக்கு : வினையெச்சம். துயரோ, பசப்போ, கௌவையோ நீ வளர்த்தனவாகிய மூன்றனுள் பெருமையையுடையதியாதென்க. பெரும் - மிகுந்த. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(358)

அழிபா டுளத்தவள் வழிபாடு மறுத்தல்

அஃதாவது தோழி அலர்மிகுந்தமையைத் தலைவற்குச் சிறைப்புறமாக உரைக்க, அழிபாடுற்ற உள்ளத்தளாகிய தலைவி அச்சத்தைத் தருகின்ற சுடுகாட்டின்கண்ணுள்ள நீற்றினை அணிந்த இறைவனை நினையாரையொத்த தன்மையையுடைய தலைவன்மீது! காமம் பெரிதாயுள்ளது. தலைவரை நீங்கின் அவ்விடத்துளதாங் குற்றம் வடவைத் தீயினும் மிக்கதாயுள்ளது. என்னுயிர்க் கின்பமில்லையேனும் பெற்றியையுடைய தலைவர் வருதலை யினி ஒழிவாராகவெனக் கூறாநிற்றல்.

 காமங் கடலிற் பெரியது கையகன் றாலங்ஙனே
 தோமங் கடல்வட வைக்குமிக் காவதென் றோல்வியுயிர்க்
 கேமங் கடலுல கத்திலின் றேனு மினியொழிக
 பேமங் கடலைப் பிரானையுன் னாரன்ன பெற்றியரே.

(இ - ள்.) (இவ்வுலகத்தின்கண்) அச்சத்தினைத் தருகின்ற சுடுகாட்டின் கண்ணுள்ள நீற்றினை யணிந்த இறைவனை (கனவினுங்) கருதாத மக்களையொத்த தன்மையையுடைய தலைவர் பக்கலில் எனக்குளவாம் விருப்பம் கடலைக்காட்டினும் பெரியதாயுள்ளது. (அவர் எங்களை) விட்டுப்பிரியின் அப்பொழுதே குற்றமானது வடவைத் தீயினும் மிகுதியாகின்றது. எனது தோல்வியினையுடைய உயிரினுக்குக் காவல்