| வலிமையினைய இவ்வுலகின் இல்லையாயினும் இனியவர் வருதலை யொழிவாராக வென்றனளென்க. (வி - ம்.) காமம் பெரிது, நீங்கிற் குற்றமானது வடவையின் மிகுதியாகின்றது. என்னுயிர்க்குக் காவலின்றேனும் பெற்றியராகிய தலைவர் வரவொழிகவென முடிக்க. தோம் - குற்றம். ஏமம் - காவல். பேம் - அச்சம். அடலை - நீறு. பேம் அங்கு அடலைப்பிரான் எனப்பிரிக்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (359) வாழி தணிகெனத் தோழி யிரத்தல் அஃதாவது வருத்தமுற்ற உளத்தினையுடையளாகி வழிபடுதலை மறுத்த தலைவியினை நோக்கித் தோழி! விரலானது புனல்சோரக் கண்ணைக் குத்திற்றென்று அக்குத்தின விரலினை நீப்பவரார். உலகத்தொருவருமிலர். நினது அருளைப்பெறத் தலைவர் குறிக்கணின்றனர். இன்று நானவரைக் காணத்தக்கதாகும் எனக் கூறாநிற்றல். | | வார்விரல் வாட்கண் மணிப்புனல் சோர வருத்திடினும் | | | ஆர்விர னீப்பவ ராயிழை யாயளி யேனினது | | | சீர்விர வாரருள் பெற்றிசை யப்பொலந் தேரவர்நம் | | | கார்விர வோங்கற் குறியினின் றாரின்று காண்பதுவே. |
(இ - ள்.) ஆராய்ந்த ஆபரணங்களையணிந்த தலைவியே! கண்ணினின்றும் புனல்சிந்த நீண்ட விரல்கள் வருத்தினும் (உலகில் யாவர்) அங்ஙனம் வருத்தின விரலினை நீப்பவர். ஒருவரும் இலர். (நின்னால்) அளிக்கத்தக்கவளாகிய யான் நினது சிறப்புப்பொருந்திய அருளினைப் பெற்றுக்கூட அழகிய தேரினையுடைய நந்தலைவர் நமது மேகந்தங்கப் பெற்ற மலையினிடத்துள்ள குறியிடத்து நின்றனர். ஆதலான் இன்று நாங்காணத் தக்கதாகு மென்றாளென்க. (வி - ம்.) இசைய - கூட. விரல்கண்ணினை வருத்திற்றென்று அவ்விரலினை நீப்பவர் ஒருவருமிலர். நந்தலைவர் பிரிந்து நமக்குத் துன்பந்தரினும் நாம் அவரை வெறுப்பது தகுதியன்றென்பாள். "வருத்திடினும் யார்விரனீப்பவர்" என்றனள். நினதருளினைப்பெறப் பொலந் தேரவர் குறிக்கணின்றா ராதலான் அவரை அளியேள் காணன் முறை யென்பாள். "அளியேன்பொலந்தேரவரை இன்று காண்பது" என்றனள். தானவள் என்னும் வேற்றுமையிலளாதலின் "அளியேன் இன்று காண்பது" என்றாள். எனவே, நீயுமவரைக்காணல் முறையாமென்றனள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : தோழி இரத்தல். (360) நெறித்தமைக் கூந்தல் மறுத்தெதிர் கோடல் அஃதாவது நீ வாழக்கடவது. நீ சீற்றத்தினைத் தணிவாயாக வெனத் தோழி இரக்கக் கரிய கூந்தலினையுடைய தலைவி அவரைக் காண்டலை விரும்பிக் கண்கள் அரிக்கும். என்னை நீக்கி ஒப்பற்ற உள்ளமானது அவரிடத்தே தங்காநிற்கும். அவர் கையிற் றழையை வாங்குதற்குத் தோள்களும் பருக்கும். என் நா அவர்புகழை விரித்துரையா நிற்கும். ஆதலால் நான் அவர்க்கு உடம்படாமை என்னெனக் கூறா நிற்றல். |